பெரியார் சிலை உடைப்பு: மிகவும் கண்டிக்கத்தக்கது, உடனடி நடவடிக்கை தேவை-ஸ்டாலின்

சென்னை, ஜனவரி-24

சென்னையில் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அண்ணா அறிவாலயத்தில் நடந்த இந்த கூட்டத்தில் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

இதன்பிறகு செய்தியாளர்களிடம் ஸ்டாலின் பேசியதாவது: மதச்சார்பற்ற கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில், அனைத்து மக்களையும் பாதிக்கும் குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற வேண்டும். என்ஆர்சி தயாரிக்கக்கூடிய எந்த முயற்சியும் எடுக்கக்கூடாது.

என்பிஆர் தயாரிக்கும் பணியை தமிழகத்தில் அனுமதிக்கக்கூடாது என்ற தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளோம். பிப்.2 முதல் 8 வரை கையெழுத்து இயக்கம் நடத்தி, அதன் பிரதிகளை, நேரம் கிடைத்தால் ஜனாதிபதியை நேரில் சந்தித்து வழங்குவோம்.

ஒவ்வொரு மாவட்டம், நகரம், ஊராட்சி ஒன்றியங்களில் கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் கையெழுத்து இயக்கத்தில் பங்கேற்பார்கள். கட்சி சார்பற்றவர்கள், பொதுமக்கள், மாணவர்கள், வணிகர்கள் ஆதரவு தர வேண்டும்.

குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற முடியாது என அமித்ஷா தெரிவித்திருந்தாலும், நாங்கள் தொடர்ந்து எங்களது எதிர்ப்பை தெரிவிப்போம். காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெரியார் சிலை உடைக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது. சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *