ரஜினிக்கு எதிரான மனுக்களை வாபஸ் பெற்றது திராவிடர் கழகம்!!!

சென்னை, ஜனவரி-24

நடிகர் ரஜினிக்கு எதிராக தாக்கல் செய்த மனுக்களை திராவிடர் கழகம் வாபஸ் பெற்றதை அடுத்து, மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

துக்ளக் இதழின் 50-வது ஆண்டுவிழாவில் 1971-ல் சேலத்தில் திராவிடர் கழகத்தின் சார்பாக பெரியார் கலந்துகொண்ட மூடநம்பிக்கை ஒழிப்பு பேரணியில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து ரஜினி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், நடிகர் ரஜினி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் 3 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

சென்னையில் இருந்து உமாபதியும், கோவையில் இருந்து நேருதாஸ் என்பவரும் மனுதாக்கல் செய்திருந்தனர். அதில், ரஜினி பெரியார் குறித்து அவதூறாக பேசியதாகவும், காவல்துறையில் புகார் அளித்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், ரஜினி மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடவேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்குகள் நீதிபதி ராஜமாணிக்கம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்: பெரியார் மிகப்பெரிய தலைவர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், ரஜினி அவர் படித்ததையே, பத்திரிகைகளில் வந்த விஷயத்தை தான் கூறியுள்ளார். புகார் அளித்த 2 நாளில் நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.

புகார் அளித்த 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் எஸ்.பி. அல்லது ஆணையரிடம் முறையிடவேண்டும். அங்கும் நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் மாஜிஸ்ரேட் நீதிமன்றத்தை நாடவேண்டும்.

அங்கு அளிக்கப்படும் தீர்ப்பில் திருப்தி இல்லையென்றால் தான் உயர்நீதிமன்றத்தை நாடவேண்டும் என்று விதி உள்ளது. இந்த வழக்கு விதியை பின்பற்றாமல் தொடரப்பட்டுள்ளது என வாதிட்டார்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, பெரியார் மிகப்பெரிய தலைவர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என தெரிவித்தார். புகார் மீது நடவடிக்கை காவல்துறைக்கு கால அவகாசம் வழங்கிய பின்பே மனுதாரர் நீதிமன்றத்தை நாடவேண்டும் என தெரிவித்தார்.

இதையடுத்து ரஜினிகுக்கு எதிராக தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெறுவதாக திராவிடர் விடுதலைக் கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மனுக்கள் வாபஸ் பெறப்பட்டதை அடுத்து வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *