தமிழகத்தில் இன்று முதல் அமலானது ’ஒரே நாடு ஒரே ரேஷன்’ கார்டு திட்டம்!!!

சென்னை, ஜனவரி-24

தமிழகத்தில் எந்த ரேஷன் கடைகளிலும் பொருட்களை வாங்கிக் கொள்ளும் ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம் அமலுக்கு வந்துள்ளது. முதற்கட்டமாக நெல்லை, தூத்துக்குடியில் இந்த திட்டம் அமலுக்கு வந்துள்ளது.

ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு திட்டம் கடந்த ஒன்றாம் தேதி கேரளா, ஆந்திரா உள்ளிட்ட 12 மாநிலங்களில் அறிமுகம் செய்யப்பட்டது. வரும் ஜூன் மாதம் ஒன்றாம் தேதிக்குள் நாடு முழுவதும் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள எந்த நியாயவிலை கடையிலும் ரேஷன் பொருட்கள் வாங்கிகொள்ளும் திட்டத்திற்கான அரசாரணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

முதற்கட்டமாக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் சோதனை முறையில் இந்த திட்டம் அமலுக்கு வந்துள்ளது. இது ஒரு வாரத்திற்கு செயல்படுத்தப்படும். அதனை தொடர்ந்து மாநிலம் முழுவதும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதன் அடிப்படையில், ஸ்மார்ட் ரேஷன் கார்டு வைத்துள்ள யாரும் தமிழகத்தில் எந்த நியாயவிலை கடையிலும் அரிசி உள்ளிட்ட பொருட்களை வாங்கி கொள்ள முடியும்.

ஸ்மார்ட் கார்டு அல்லது ஆதார் கார்டு அல்லது பதிவு செய்த செல்போன் எண் ஆகியவற்றுள் ஒன்றை பயன்படுத்தி ரேஷன் பொருட்களை பெறலாம். வேலைக்காக வெளியூர் சென்று பணிபுரிபவர்கள் உள்ளிட்டோருக்கு இந்த திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தமிழகத்தில் தற்போது 2 கோடியே 5 லட்சம் ரேஷன் கார்டுகள் உள்ள நிலையில், 35 ஆயிரத்து 233 நியாயவிலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *