கோவை வெள்ளலூர் பேருந்து நிலையம்: பணிகளை தொடங்கி வைத்தார் அமைச்சர் S.P.வேலுமணி!!!

கோவை, ஜனவரி-24

கோவை வெள்ளலூரில் அமையவிருக்கும் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தின் கட்டுமானப் பணிகளை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியான தொழில் நகரமான கோவையில் மக்கள் தொகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் அதிகளவு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதற்கு தீர்வு காணும் வகையில் கோவை வெள்ளலூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சட்டசபையில் விதி எண் 110-ன் கீழ் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் அந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக புதிய பேருந்து நிலையம் அமைக்க 168 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.  பி அண்ட் சி கட்டுமான நிறுவனம் சார்பில் கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ள ஒப்பந்த அனுமதியும் வழங்கப்பட்டது.

இந்த நிலையில், ஒருங்கிணைந்த பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பூஜை செய்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ராசாமணி, மாநகராட்சி துணை ஆணையர் பிரசன்னா ராமசாமி, எம்.எல்.ஏ.,க்கள் எட்டிமடை சண்முகம், ஆறுக்குட்டி மற்றும் அரசு துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் போல் மிகப்பெரிய அளவில் அமையவுள்ள இந்த புதிய பேருந்து நிலையத்தில், ஒரே நேரத்தில் 140 பேருந்துகளை நிறுத்த முடியும். புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டால் கோவையில் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆசியாவிலேயே மிகப் பெரியதாக அமைய உள்ள இந்த ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் 61 ஏக்கர் நிலப்பரப்பளவில் கட்டப்படவுள்ளது. கோவை நகரில் செயல்படுத்தப்பட உள்ள மெட்ரோ ரயில் சேவையும், இந்த பேருந்து நிலையத்துடன் இணைக்கப்பட உள்ளது.

ஒருங்கிணைந்த பேருந்து நிலைய வளாகத்துக்குள், பணிமனை, போக்குவரத்து ஊழியர்கள் தங்குமிடம், பயணிகள் ஒய்வு அறைகள், கடைகள், வாடகை ஊர்திகளுக்கான அலுவலகங்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் நவீன வசதிகள் அமைய உள்ளன. இந்த பேருந்து நிலையத்தின் மேற்கூரை முழுவதும் சோலார் பேனல்கள் பொருத்தப்பட உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *