இடைத்தேர்ல்; அதிமுகவுக்கு பாமக – திமுகவுக்கு விசிக, கொமதேக, மமக ஆதரவு

சென்னை,. செப்-22

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 21-ந் தேதி நடைபெறுகிறது. இத்தொகுதிகளில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 24-ல் எண்ணப்படும். இரு தொகுதிகளுக்குமான வேட்புமனுத் தாக்கல் நாளை தொடங்குகிறது. நாங்குநேரியில் காங்கிரஸும் விக்கிரவாண்டியில் திமுகவும் போட்டியிடும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் திமுகவும் அதிமுகவும் இரு தொகுதிகளிலும் போட்டியிட விரும்புவோரிடம் விருப்ப மனுக்களைப் பெற்றும் வருகின்றன. இடைத்தேர்தல் பணிகள் விறுவிறுவென களைகட்டிய வருகிறது.

இந்நிலையில் இரு தொகுதிகளிலும் அதிமுகவை ஆதரிப்பதாக பாமக அறிவித்துள்ளது. லோக்சபா தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணியில் பாமக இடம்பெற்றிருந்தது. ஆனாலும் பாமக ஒரு தொகுதியில் கூட வெல்லவில்லை. இதன்பின்னர் பாமகவின் அன்புமணிக்கு ராஜ்யசபா எம்.பி. பதவியை கொடுத்தது அதிமுக.

அதேபோல் இடைத்தேர்தல் நடைபெறும் இரு தொகுதிகளிலும் திமுகவின் வெற்றிக்குப் பாடுபடப் போவதாக கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக, காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு விசிக ஆதரவு என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு மக்கள் சரியான பாடத்தை புகட்டுவார்கள், திமுக – காங்கிரஸ் வேட்பாளர்களின் வெற்றிக்கு விசிக முழுமையாக பாடுபடும் எனவும் கூறியுள்ளார்.

திமுக கூட்டணிக்கு மனித நேய மக்கள் கட்சி ஆதரவளிப்பதாக அக்கட்சி தலைவர் ஜவஹருல்லா ஸ்ரீவில்லிபுத்தூரில் பேட்டியளித்துள்ளார். நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தலால் தி.மு.க, காங்கிரஸ்க்கு முழு ஆதரவு அளிக்கப்படும் என தெரிவித்தார்.

இதனிடையே இடைத்தேர்தல் தொடர்பாக எந்த ஒரு முடிவையும் இதுவரை பாஜக எடுக்கவில்லை என முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *