ரஜினி நல்ல மனிதர், நியாயவாதி, ரஜினி ரசிகர்கள் பொறுமை காப்பது சங்கடமாக உள்ளது-ராஜேந்திர பாலாஜி

விருதுநகர், ஜனவரி-23

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் புதிதாக கட்டப்படவுள்ள கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

இதில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியதாவது:  பெரியாரைப் போன்றவர்கள் இல்லையென்றால் தான் அமைச்சராகி இருக்க முடியாது என்றார். ஆனால் ஆன்மீகத்தை பொறுத்தவரை ரஜினி கூறியதில் தவறு இல்லை.

சேலத்தில் 1971 பேரணியில் என்ன நடந்ததோ அதனை தான் ரஜினி கூறியுள்ளார். கொடும்பாவியை எரிப்போம். வீட்டை முற்றுகையிடுவோம் என தி.க.வினர் ரஜினியை மிரட்டி பார்க்கிறார்கள். ஆன்மிகவாதிகளை பழிதீர்க்கும் செயலை தி.க.வினர் செய்கின்றனர். திமுகவின் முகமூடிதான் தி.க.

ரஜினி நியாயவாதி. நல்ல மனிதர். மனதில் பட்டதை கள்ளம் கபடம் இல்லாமல் பேசுபவர் ரஜினி. சேலம் பேரணியில், ராமர் படத்தை நிர்வாணமாக கொண்டு வந்தது உண்மையா இல்லையா? இதே வேறு மதத்தை சேர்ந்த கடவுளை இப்படி செய்திருந்தால் சும்மா விடுவார்களா? பயங்கரவாதம் வெடித்திருக்காதா? இந்து மதத்தை இழிவுபடுத்துபவர்கள் தேர்தலில் அதன் விளைவுகளை அனுபவிப்பார்கள்.

ரஜினிகாந்த் என்ற தனிமனிதனை, தமிழச்சியை திருமணம் செய்த ஒரு மனிதனை அவமரியாதை செய்வது கண்டிக்கத்தக்கது. அதை யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ரஜினி ரசிகர்கள் பொறுமை காப்பது சங்கடமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *