தொழில் வளர்ச்சியில் தமிழகம் முதலிடத்திற்கு உயரும்-முதலமைச்சர் பழனிசாமி

சென்னை, ஜனவரி-23

தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் உதவியுடன், டி.எல்.எப் நிறுவனம், சென்னை தரமணியில் டைடல் பார்க் போன்ற, வர்த்தக ரீதியிலான பணி அமைவிடத்தை 5 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்ட உள்ளது. இதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். இதில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:  தொழில்துறை வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு ஆக்கப்பூர்வமான முறையில் அனைத்து முன்னணி நிறுவனங்களோடு அதிமுக அரசு இணைந்து செயல்படுகிறது. புதிய தொழில் முதலீடுகளை தமிழ்நாடு தொடர்ந்து ஈர்த்து தொழில் துறையில் முன்னணி மாநிலமாக திகழ்ந்து வருகிறது.

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்குப் பிறகு, இதுவரை 19 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் 63 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் 83 ஆயிரம் வேலை வாய்ப்புகள் புதிதாக உருவாக்கப்பட உள்ளன. தமிழகத்தை உலகளவில் உற்பத்தி மையமாக மாற்றும் தொலைநோக்குடன் செயல்பட்டு வருகிறோம்.

வேளாண்மை, தொழில், மனித வள மேம்பாடு, பொது சுகாதாரம், உட்கட்டமைப்பு வசதிகள், சமூக நல திட்டங்கள் உள்ளிட்ட பத்து துறைகளில் எடுத்துக் கொள்ளப்பட்ட ஐம்பது குறியீடுகளின் அடிப்படையில், 2019-க்கான மத்திய அரசின் நல் ஆளுமை குறியீட்டு அறிக்கையில் தமிழ்நாடு முதலாவதாக வந்து சாதனை படைத்துள்ளது.

தமிழ்நாட்டில் அன்னிய நேரடி முதலீடு கடந்த ஆண்டுகளில் ஒரு லட்சத்து 33 ஆயிரம் கோடி ரூபாய் என இருந்தது. கடந்த 3 ஆண்டுகளில் அது ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. அதாவது சுமார் 47 ஆயிரம் கோடி ரூபாய் அன்னிய நேரடி முதலீட்டு ஈர்க்கப்பட்டுள்ளது.

சென்னை இன்று இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப தலைநகரம் என்று கூறுகின்ற அளவிற்கு பல புதிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தொடங்கப்பட்டு வருகின்றன. தூத்துக்குடியில் 49 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கப்பட உள்ள கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மூலம் தமிழகத்தின், தென் மாவட்டங்கள் வளர்ச்சிப்பெறும் என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *