இடைத்தேர்தல் – அதிமுக, திமுக சார்பில் விருப்ப மனு விநியோகம்

சென்னை, செப்-22

தமிழகத்தில் காலியாக உள்ள விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதிகளுக்கு அக்டோபர் 21-ல் இடைத்தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நேற்று அறிவித்தார்.
இடைத்தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலில் வந்தன. இடைத்தேர்த்லுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை தொடங்கி 30-ம் தேதி முடிவடைகிறது.

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் நாளை தொடங்க உள்ள நிலையில், அ.தி.மு.க., தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்களுக்கான விருப்ப மனு வினியோகம் தொடங்கியுள்ளது.

அ.தி.மு.க. சார்பில் விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் போட்டியிட விரும்புபவர்களுக்கான விருப்ப மனு வினியோகம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமையகத்தில் இன்று காலை 10 மணிக்குத் தொடங்கியது. இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்ப வினியோகம் நடைபெற்றது. விண்ணப்பக் கட்டணம் 25 ஆயிரம் ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளையும் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை விண்ணப்ப வினியோகம் நடைபெறும் என்றும், மாலை 3.30 மணிக்கு நேர்காணல் நடைபெறும் என்றும் அதிமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

புதுச்சேரி காமராஜ் நகர் சட்டமன்ற இடைத் தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனுக்கள் வினியோகம் நாளை காலை 10 முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறும் என்றும் விண்ணப்பக்கட்டணம் 10 ஆயிரம் ரூபாய் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பூர்த்தி செய்த விண்ணப்பப் படிவங்களை மாலை 3 மணிக்குள் வழங்க வேண்டும் என்றும் நாளை மாலை 3.30 மணிக்கு நேர்காணல் நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே, விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்களுக்கான விருப்ப மனு வினியோகம் தொடங்கியுள்ளது. ஆயிரம் ரூபாய் செலுத்தி விண்ணப்பப் படிவத்தை பெறலாம் என்றும், விண்ணப்பக் கட்டணம் 25 ஆயிரம் ரூபாய் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பூர்த்தி செய்த விண்ணப்பத்தை நாளை காலை 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், வரும் 24ஆம் தேதி காலை 10 மணியளவில் நேர்காணல் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *