ஜனநாயக நாடான இந்தியா பாசிச நாடாக மாற்றப்பட்டு வருகிறது-கனிமொழி

சென்னை, ஜனவரி-23

இந்தியா ஒரு பாசிச நாடாக மாற்றப்பட்டு வருகிறது என திமுக எம்.பி. கனிமொழி கூறியுள்ளார்.

தேர்தல் நடைமுறை மற்றும் பன்முகத்தன்மை, அரசின் செயல்பாடு, அரசியல் பங்கேற்பு, அரசியல் கலாசாரம் மற்றும் குடிமக்கள் உரிமை ஆகிய 5 அம்சங்களின் அடிப்படையில் சர்வதேச ஜனநாயக தரக் குறியீடு பட்டியல் தயாரிக்கப்படுகிறது. உலக நாடுகளில் ஜனநாயகத்தின் நிலை குறித்து ஆண்டுதோறும் தி எகனாமிஸ்ட் இன்டலிஜென்ஸ் யூனிட் தரக்குறியீட்டை வெளியிட்டு வருகிறது. 

அதில் கடந்த ஆண்டு 41-ஆவது இடத்தில் இருந்த இந்தியா, இந்த முறை 10 இடங்கள் பின்தங்கி 51-ஆவது இடத்தில் சென்றிருக்கிறது. குடிமக்கள் உரிமையில் ஏற்பட்ட சறுக்கலே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இது தொடர்பாக திமுக எம்.பி.கனிமொழி தமது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- உலக ஜனநாயக குறியீட்டில், இந்தியா ஒரே ஆண்டில் 10 இடங்கள் கீழிறங்கியிருப்பது, இந்தியாவில் உரிமைகள் எப்படி பறிக்கப்பட்டு வருகின்றன என்பதை உணர்த்துகிறது.  ஒரு வலிமையான ஜனநாயக நாடாக இருந்த இந்தியா ஒரு பாசிச நாடாக மாற்றப்பட்டு வருகிறது என பதிவிட்டுள்ளார்.

இதேபோன்று, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில் ஜனநாயகம் தழைத்தோங்கும் நாடுகளில் இந்தியா 41-ஆவது இடத்திலிருந்து 51-ஆவது இடத்திற்கு சென்றுள்ளது வருத்தமளிக்கிறது. ஜனநாயகத்திற்காக நாம் செய்த தியாகங்களும், கொடுத்த விலையும் அதிகம். ஆகவே, இந்தியாவில் ஜனநாயகம் தழைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்!!! என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *