அமெரிக்காவில் பிரதமர் மோடிக்கு சீக்கிய, போரா, காஷ்மீரி பண்டிட் சமூகத்தினர் உற்சாக வரவேற்பு

அமெரிக்காவில் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடிக்கு அங்குள்ள சீக்கியர்கள், போரா மற்றும் காஷ்மீரி பண்டிட் சமூகத்தினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

வாஷிங்டன், செப்-22

பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறைப் பயணமாக அமெரிக்காவில் 7 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக நேற்று முன்தினம் இரவு டெல்லியில் இருந்து புறப்பட்ட அவர் நேற்று அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் ஹூஸ்டன் நகர் சென்றடைந்தார். முதல் கட்டமாக, ஹூஸ்டனில் நடந்த எரிசக்தி மற்றும் எண்ணெய் நிறுவன தலைவர்கள் கலந்துகொண்ட கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.

இதையடுத்து, ஹூஸ்டன் நகரில் பிரதமர் மோடியை சீக்கிய சமூகத்தினர் வரவேற்றனர். கர்த்தார்பூர் வழித்தடம் திறப்பதற்கு மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிகள் உள்ளிட்ட சீக்கிய சமூகத்தினருக்கான பணிகளுக்காக பிரதமர் மோடிக்கு நினைவு பரிசு வழங்கி மகிழ்ந்தனர். அப்போது, மத்திய அரசு எடுத்துள்ள பல முடிவுகளுக்காக பாராட்டு தெரிவித்ததுடன், தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர். அந்த மனுவில், 1984 ல் நடந்த சீக்கியர் படுகொலை குறித்த விவகாரம், டில்லி விமான நிலையத்திற்கு, குருநானக் தேவ் சர்வதேச விமான நிலையம் என பெயர் சூட்டுதல், இந்திய அரசியல் சாசனத்தில் 25வது பிரிவு, விசா மற்றும் பாஸ்போர்ட் புதுப்பித்தல் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கியுள்ளன.

இதேபோல், போரா சமூக உறுப்பினர்களும் பிரதமர் மோடியை ஹூஸ்டன் நகரில் வரவேற்று சால்வை அணிவித்து மரியாதை செலுத்தி புகைப்படமும் எடுத்து கொண்டனர்.

அதைத்தொடர்ந்து அங்குள்ள காஷ்மீரி பண்டிட் சமூகத்தினர் அடங்கிய குழுவினரும் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினர். அவர்களில் ஒருவர் பிரதமர் மோடியின் கைகளுக்கு முத்தமிட்டபடி, 7 லட்சம் காஷ்மீரி பண்டிட்டுகளின் சார்பில் எங்களது நன்றியை தெரிவித்து கொள்கிறோம் என தெரிவித்தார்.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு நீக்கத்தை தாங்கள் வரவேற்று அதற்கு வாழ்த்து தெரிவித்ததாக காஷ்மீரி பண்டிதர் சமுதாயத்தினர் கூறினர். அப்போது, தாங்கள் நிறைய இன்னல்களை அனுபவித்து விட்டதாகவும், அனைவரும் சேர்ந்து காஷ்மீரை முன்னேற்றலாம் என்று பிரதமர் மோடி கூறியதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

இதைத்தொடர்ந்து, டெக்சாஸ் மாநிலத்தில்ஏற்பாடு செய்துள்ள ‘ஹவுடி மோடி’ என்ற சிறப்பு நிகழ்ச்சியில் மோடி இன்று பங்கேற்கிறார். அமெரிக்க அதிபர் டிரம்பும் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 50 ஆயிரம் பேர் கலந்து கொள்கின்றனர் என்பது, குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *