சென்னையில் குப்பைகளை சேகரிக்க இனி கட்டணம், 3 மாதத்தில் அமலுக்கு வருகிறது-மாநகராட்சி

சென்னை, ஜனவரி-23

சென்னையில் வீடு மற்றும் வணிக வளாகங்கள் உள்ளிட்ட இடங்களில் சேகரிக்கப்படும் குப்பைகளுக்கு கட்டணம் வசூலிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. அதுமட்டுமில்லாமல், குப்பைகளை தரம் பிரித்து வழங்காவிட்டால் கூடுதலாக அபராதம் வசூலிக்கலாம் என்றும் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி சார்பில் தினந்தோறும் வீடுகள், வணிக வளாகங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட இடங்களில் இருந்து குப்பைகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நாள்தோறும் சுமார் 5,220 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. அவை தரம் பிரிக்கப்பட்டு மக்கும் குப்பையிலிருந்து உரங்களும், மீத்தேன் எரிசக்தியும் தயாரிக்கப்படுகின்றன. மக்காத குப்பைகள் மறுசுழற்சிக்கு அனுப்பப்படுகின்றன.

பெரும்பாலான மக்கள் குப்பைகளை தரம் பிரித்து வழங்குவதில்லை. இதனால் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற முடியாத நிலை ஏற்படுகிறது.

இதனை தடுக்கும் விதமாக திடக்கழிவு மேலாண்மை திட்ட விதிகளை சென்னை மாநகராட்சி கடுமையாக்கியுள்ளது. அதன்படி, மக்களிடம் இருந்து குப்பைகளை தரம்பிரித்த பின்னரே வாங்கவேண்டும், அவ்வாறு இல்லையென்றால் கூடுதலாக அபராதம் வசூலிக்கப்படும்.

பொது இடங்களில் குப்பைகளை கொட்டக்கூடாது போன்ற விதிகள் வகுக்கப்பட்டது. இந்த விதிகளுக்கு கடந்த ஆண்டு டிசம்பரில் ஒப்புதல் அளிக்கப்பட்டு, அது மாநில அரசின் அனுமதிக்காக அனுப்பப்பட்டது. இதற்கு அனுமதி அளித்து மாநில அரசு, அரசாணையையும் வெளியிட்டுள்ளது.

அதன் அடிப்படையில், குப்பைகளை சேகரிப்பதற்கு வீடு ஒன்றுக்கு ரூ.10 முதல் ரூ.100 வரை கட்டணமாக செலுத்த வேண்டும். அதேபோன்று மக்கும் குப்பைகளையும், மக்காத குப்பைகளையும் தனித்தனியே பிரித்து வழங்காவிட்டால் கூடுதலாக அபராதமும் செலுத்த வேண்டும். வீடுகள் மட்டுமின்றி வணிக வளாகங்கள், பொது இடங்கள், கடைகள், மருத்துவமனைகளுக்கும் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், இதுபற்றி பொதுமக்களுக்கு விளம்பரப்படுத்தப்படும். அடுத்த 3 மாதங்களுக்குள் புதிய கட்டண நடைமுறை செயல்படுத்தப்படும். சொத்து வரியுடன் சேர்த்து வீடுகளுக்கான குப்பை சேகரிப்பு கட்டணம் வசூலிக்கப்படும்.

வீடுகள் ரூ.10 முதல் ரூ.100 வரை, வணிக நிறுவனங்கள் ரூ.1,000 முதல் ரூ.5,000 வரை, நட்சத்திர விடுதிகள் ரூ.300 முதல் ரூ.3,000 வரை, திரையரங்குகள் ரூ.750 முதல் ரூ.2,000 வரை, அரசு அலுவலகங்கள் ரூ.300 முதல் ரூ.3,000 வரை, உரிமம் பெற்ற கடைகள் ரூ.500 முதல் ரூ.1,000 வரை, பொது இடங்களில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளுக்கு ரூ.5,000 முதல் ரூ.20,000 வரை, மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகள் ரூ.2,000 முதல் ரூ.4,000 வரை, தனியார் பள்ளிகள் ரூ.500 முதல் ரூ.3,000 வரை கட்டணம் வசூல் செய்யப்படும்

பொது இடத்தில் குப்பை கொட்டினால் ரூ.500 முதல் ரூ.5,000 வரை, தரம் பிரித்து வழங்காதவர்களுக்கு ரூ.500 முதல் ரூ.5,000 வரை, பொது இடத்தில் கட்டுமான கழிவுகள் கொட்டினால் ரூ.2,000 முதல் ரூ.5,000 வரை, குப்பைகளை எரிப்பவர்களுக்கு ரூ.500 முதல் ரூ.2,000 வரை அபராதத்தொகை வசூலிக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *