7 நாட்களுக்குள் தூக்கில் போடவேண்டும்-உச்சநீதிமன்றத்தில் உள்துறை அமைச்சகம் மனு

டெல்லி, ஜனவரி-23

கருணை மனு நிராகரிக்கப்பட்ட அடுத்த 7 நாட்களுக்குள் மரண தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என உள்துறை அமைச்சகம் உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை மனு தாக்கல் செய்துள்ளது.

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் தாக்கல் செய்த மனுவில் கூறியுள்ளதாவது: மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்ட பிறகு, அவர்கள் சீராய்வு மனு தாக்கல் செய்ய காலக்கெடு நிர்ணயிக்க வேண்டும்.

சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டு, மரண தண்டனை உத்தரவு பிறப்பிக்கப்பட்டவுடன், தூக்கு தண்டனையை 7 நாட்களுக்குள் நிறைவேற்ற வேண்டும்.

ஒருவேளை, குற்றவாளி, குடியரசுத் தலைவருக்கு கருணை மனு தாக்கல் செய்ய விரும்பினால், அந்த 7 நாள் காலக்கெடுவுக்குள் தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும். ஒரு குற்றவாளியின் கருணை மனு நிராகரிக்கப்பட்ட 7 நாட்களுக்குள் மரண தண்டனை உத்தரவு பிறப்பிப்பதை மாநில அரசுகள் மற்றும் சிறைத்துறை நிர்வாகத்துக்கு கட்டாயமாக்க வேண்டும்.

அவருடைய சக கைதிகளின் கருணை மனுவோ, மறுஆய்வு மனுவோ, சீராய்வு மனுவோ நிலுவையில் இருந்தாலும், அந்த குற்றவாளிக்கு அடுத்த 7 நாட்களுக்குள் தூக்கு தண்டனை நிறைவேற்றுவதை கட்டாயமாக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிர்பயா குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டும், தொடர் கருணை மனு மற்றும் சீராய்வு மனுக்கள் காரணமாக தண்டனை நிறைவேற்றப்படாமல் காலம் தாழ்த்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் உள்துறை அமைச்சகம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *