காஷ்மீர் விவகாரம்: டிரம்ப்பின் விருப்பத்தை நிராகரித்தது இந்தியா!!!

டெல்லி, ஜனவரி-23

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு தயாராக இருப்பதாக கூறிய அமெரிக்க அதிபர் டிரம்பின் கோரிக்கையை இந்தியா மீண்டும் நிராகரித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு மத்தியஸ்தம் செய்ய அமெரிக்கா தயாராக இருப்பதாக டிரம்ப் பலமுறை கூறினார். பாகிஸ்தான் அமெரிக்காவின் ஆதரவை நாடினாலும், டிரம்பின் கருத்தை இந்தியா ஏற்க மறுத்தது.

சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் உலக பொருளாதார கூட்டமைப்பின் மாநாடு 4 நாட்கள் (ஜனவரி 21- 25) நடைபெறுகிறது. இதில் பங்கேற்றுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், மாநாட்டின் இடையே அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை நேற்று சந்தித்து பேசினார்.

இந்த மாநாட்டிற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப் ‘காஷ்மீரைப் பற்றியும், பாகிஸ்தான் மற்றும் இந்தியா இடையே என்ன நடக்கிறது என்பது பற்றியும் இருவரும் பேசினோம். நாங்கள் நிச்சயமாக உதவுவோம். இரு நாடுகளுடையிலான பிரச்சினையை அமெரிக்கா தீவிரமாக கண்காணித்து வருகிறது’ என தெரிவித்தார்.

இந்நிலையில், ‘காஷ்மீர் விவகாரம் இருதரப்பு விவகாரம். இதில் மூன்றாவது நாட்டின் தலையீடு இருப்பதை இந்தியா விரும்பவில்லை’, என வெளியுறவுத்துறை அமைச்சகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு 4-வது முறையாக காஷ்மீர் விஷயத்தில் டிரம்பின் விருப்பம் மறுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *