இடைத்தேர்தலில் ஜகா வாங்கியது, ம.நீ.ம.

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடாது என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

சென்னை, செப்-22

தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி, புதுச்சேரியில் காமராஜர் நகர் உள்ளிட்ட நாடு முழுவதிலும் காலியாக இருக்கும் 64 சட்டமன்ற தொகுதிகளுக்கும் அக்டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும். வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 24ம் தேதி நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்தார்.

இந்நிலையில், நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய சட்டசபை இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது என கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2021ல் மக்களின் பேராதரவுடன் ஆட்சிப் பொறுப்பினை கைப்பற்றி மக்களாட்சிக்கு வழிவகுக்கும் முனைப்போடு மக்கள் நீதி மய்யம் கட்சி வேகமாக முன்னேறி வருவதாக தெரிவித்துள்ளார்.
எனவே நாங்குநேரியிலும், விக்கிரவாண்டியிலும் தங்கள் தலைவர்களையும், அவர்களது தலைப்பாகைகளையுமாவது தக்க வைத்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்துடன், ஆட்சியிலிருந்தவர்களும், ஆள்பவர்களும் போடும் இடைத்தேர்தல் எனும் ஊழல் நாடகத்தில் மக்கள் நீதி மய்யம் பங்கெடுக்காது எனவும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, நாங்குநேரி , விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக, திமுக போட்டியிடுவதாக அறிவித்துள்ளன. அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இந்த இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *