ராசிபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் சரோஜாவின் வெற்றி செல்லும்!!!

சென்னை, ஜனவரி-22

ராசிபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட சரோஜாவின் வெற்றி செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் தற்போதைய அமைச்சர் சரோஜாவும், திமுக சார்பில் அதன் துணை பொதுச் செயலாளர் வி.பி. துரைசாமியும் போட்டியிட்டனர். அதிமுக வேட்பாளரான சரோஜா 86,901 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளரான துரைசாமி 77,270 வாக்குகள் மட்டுமே பெற்றிருந்தார். இதனையடுத்து, சரோஜா அந்த தொகுதியில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இந்த வெற்றியை எதிர்த்து திமுக துணைப் பொதுச் செயலாளர் வி.பி.துரைசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கை தொடர்ந்திருந்தார். அதில், அதிமுக வேட்பாளர் சரோஜா பணப்பட்டுவாடா மற்றும் அதிகார துஷ்பிரயோகம் ஆகியவற்றால் வெற்றி பெற்றுள்ளதாகவும், இந்த வெற்றியை செல்லாது என அறிவித்து, ராசிபுரம் தொகுதிக்கு மறு தேர்தல் நடத்தவேண்டும் என கோரிக்கை வைத்தார்.

தனக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்யக்கோரிய அதிமுக வேட்பாளர் சரோஜாவின் மனு கடந்த 2017-ம் ஆண்டு நிராகரிக்கப்பட்டது. மேலும், இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடந்து வந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. இதில், திமுக வேட்பாளர் வி.பி.துரைசாமி கூறிய புகார்களுக்கு போதிய ஆதாரம் ஏதும் இல்லை என்று கூறி அவரது வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் அதிமுக வேட்பாளர் சரோஜா வெற்றி செல்லும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *