முழுவீச்சில் தயாராகிறது சந்திரயான் 3-இஸ்ரோ தலைவர் சிவன்

பெங்களூரு, ஜனவரி-22

சந்திரயான் -3 விண்கலம் தயாரிக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவின் பெங்களூருவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இஸ்ரோ தலைவர் சிவன் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: ககன்யான் திட்டமானது விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் திட்டம் என்பதோடு மட்டும் இல்லாமல், நீண்டகால தேசிய மற்றும் சர்வதேச அளவிலான ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றுக்கான கட்டமைப்பினை உருவாக்கும் வாய்ப்பினை வழங்கும்.

அறிவியல் கண்டுபிடிப்புகள், பொருளாதார வளர்ச்சி, கல்வி, தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவை அனைத்து நாடுகளுக்கும் உள்ள இலக்குகள்.  விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் திட்டம் இந்த இலக்குகள் அனைத்திற்கும் சரியான தளத்தினை வழங்கும்.

ககன்யான் திட்டத்திற்காக இந்தியாவில் இருந்து 4 விண்வெளி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு இந்த மாத இறுதியில் ரஷ்யாவிற்கு பயிற்சிக்காக அனுப்பி வைக்கப்படுவர்.  கடந்த 1984ம் ஆண்டு ரஷ்ய விண்கலத்தில் இந்தியரான ராகேஷ் சர்மா பயணம் செய்துள்ளார்.  ஆனால் இந்த முறை இந்திய விண்வெளி வீரர்கள் இந்தியாவில் இருந்து நம் நாட்டின் விண்கலத்தில் விண்வெளிக்கு பறக்க உள்ளனர். 

இதேபோன்று சந்திரயான்-3ற்கான திட்ட பணிகள் தொடங்கி முழு வீச்சில் நடந்து வருகின்றன. சந்திரனுக்கும் மனிதனை அனுப்பும் திட்டம் உள்ளது. ஆனால், அது சிலகாலம் கழித்து தான் ஏற்படுத்தப்படும்.

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் ஒரு பகுதியாக, மனித ரோபோவை அனுப்பி ஆய்வு செய்ய இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. 2022-ல் மனிதர்களை விண்ணுக்கு அனுப்புவதற்கு முன் வியோமித்ரா என்ற பெண் உருவம் கொண்ட மனித ரோபோவை இஸ்ரோ அனுப்ப உள்ளது.

இந்த மனித ரோபோ 2 மொழிகளில் பேசுவது உள்ளிட்ட பல பணிகளை ஒரே நேரத்தில் செய்யும் திறன் கொண்டதாக இருக்கும். இது போன்ற பல மனித ரோபோக்களை அறிமுகம் செய்து, விண்வெளி ஆய்வுக்கு இஸ்ரோ பயன்படுத்த உள்ளது. முதலில் ஆளில்லாமல் விண்கலம் அனுப்பவும், பிறகு மனித ரோபோக்களை பயன்படுத்தி விண்கலங்களை அனுப்பி சோதிக்க உள்ளதாகவும் இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *