5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு: அந்தந்த பள்ளிகளில் தேர்வு மையம் அமைக்க உத்தரவு

சென்னை, ஜனவரி-22

5 மற்றும் 8-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு அந்தந்த பள்ளிகளிலேயே தேர்வு மையங்கள் அமைக்க சுற்றறிக்கை அனுப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவது போல், 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு நடத்தப்பட உள்ளது. மேலும் 5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மையங்கள் வேறு பள்ளிகளில் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதற்கு பலத்த எதிர்ப்புகள் கிளம்பியது. பின்னர், 5, 8 பொதுத்தேர்வுக்கு மாணவர்கள் வேறு பள்ளிக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. அந்தந்த பள்ளிகளிலே தேர்வு எழுதிக் கொள்ளலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்தார்.

இந்நிலையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தொடக்க கல்வி இயக்குனர் அதிகாரப்பூர்வமாக சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அதில் கூறியுள்ளதாவது; 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுக்கு, அந்தந்த பள்ளிகளிலே தேர்வு மையங்கள் அமைக்கப்படும். அரசு பள்ளிகளை தவிர்த்து, தனியார் பள்ளி மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 5 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு 100 ரூபாய் என்றும், 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு 200 ரூபாய் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீட்டில் சேர்ந்த மாணவர்கள் தேர்வு கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *