குடியுரிமை திருத்த சட்டம்: இடைக்காலத் தடை விதிக்க மறுப்பு, அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்

டெல்லி, ஜனவரி-22

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம் அச் சட்டத்திற்கு தடை விதிக்க மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான மனுக்கள் அனைத்தும் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள், பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. காங்கிரஸ் கட்சியின் ஜெயராம் ரமேஷ், திமுக, மக்கள் நீதி மய்யம், திரிணாமுல் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் என பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் தனிநபர்கள் சார்பில், குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த மனுக்கள் கடந்த மாதம் தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான 144 மனுக்கள் மீது உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான அமர்வு இன்று மீண்டும் விசாரணை நடத்தியது.

அப்போது, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என மனுதாரர்கள் தரப்பில் வேண்டுகோள் வைக்கப்பட்டது. தேசிய மக்கள் தொகை பதிவேடு பணிகளை தொடங்குவதற்கு முன்பாக, இந்த வழக்கில் உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்றும் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் கோரிக்கை விடுத்தார். சிஏஏ.வுக்கு எதிரான 143 மனுக்களில் 60 மனுக்களுக்கு பதில் அளிக்க அவகாசம் தேவை என மத்திய அரசு வழக்கறிஞர் வேணுகோபால் கேட்டார்.

இதனை கேட்ட தலைமை நீதிபதி, மத்திய அரசின் வாதத்தை கேட்காமல் சிஏஏ.வுக்கு ஒரு தலைபட்சமாக எந்த தடையும் விதிக்க முடியாது. அசாம் விவகாரம் முற்றிலும் மாறுபட்டது. அசாம் மற்றும் திரிபுராவில் இருந்து சிஏஏ.வுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தனியாக விசாரிக்கப்படும் என தெரிவித்தனர்.

இதனையடுத்து, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர். சிஏஏ.வை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்படும். தொடர்ந்து 4 வாரங்களில் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *