அதிமுகவில் வாரிசு அரசியல் இல்லை-முதலமைச்சர் பழனிசாமி

சேலம், ஜனவரி-21

சேலம் மாவட்டம் ஆத்தூரில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு உரையாற்றினார். இதில், ஏராளமான அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: திரைப்படங்கள் மூலம் ஆக்கப்பூர்வமான கருத்துகளை சமுதாயத்தில் புகுத்தியவர் எம்.ஜி.ஆர். தற்போது ஏதேதோ தலைப்புகளில் திரைப்படங்கள் வருகின்றன, ஒரு படம் கூட மனதில் நிற்பதில்லை. எம்ஜிஆர் படங்களில் இருந்த உயிரோட்டம் இப்போது வரும் திரைப்படங்களில் இல்லை. இன்றைக்கு உள்ள நடிகர்களின் திரைப்படங்களை பார்த்தால் குழந்தைகள் கெட்டுவிடுவார்கள்.

அதிமுகவில் வாரிசு அரசியல் இல்லை. அடிமட்ட தொண்டர்கள் கூட அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகலாம். கட்சிக்காக உழைக்கும் தொண்டர்களுக்கு பதவி கொடுத்து அதிமுக அழகு பார்க்கிறது. அதிமுகவில் லட்சக்கணக்கான முதலமைச்சர்கள் உள்ளனர். நான் மட்டும் முதலமைச்சர் இல்லை. அதிமுகவில் இருப்பவர்கள் அனைவருமே முதல்வர் ஆவதற்கான தகுதி உடையவர்கள். ஒரு பழனிசாமி அல்ல; ஓராயிரம் பழனிசாமிகள் அதிமுகவில் உள்ளனர். பொய்யான வாக்குறுதிகளை சொல்லி திமுக கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றது. ஒரு சாதாரண நபர் திமுகவில் உயர்ந்த பதவிக்கு வர முடியுமா? இவ்வாறு முதலமைச்சர் பழனிசாமி பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *