தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு: 21 அதிகாரிகள் கொண்ட குழு நியமனம்

மதுரை, ஜனவரி-21

தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்குப் பணிகளை கண்காணிக்க, தலைமைச் செயலர் தலைமையில் 21 அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குடமுழுக்கை தமிழில் நடத்தக் கோரிய வழக்கை வருகிற 27-ம் தேதிக்கு உயர்நீதிமன்ற கிளை ஒத்திவைத்துள்ளது. 

தஞ்சாவூர் பெரிய கோயில் குடமுழுக்கு விழா, வருகிற பிப்ரவரி மாதம் 2-ம் தேதி நடைபெறுகிறது. 10 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த நிகழ்வில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதொடர்பாக, தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தஞ்சை பெரிய கோயிலில் கும்பாபிஷேகப் பணிகளை கண்காணிக்க 21 அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைமைச் செயலாளர் தலைமையிலான குழுவில், அரசின் பல்வேறு துறைகளின் செயலாளர்கள், மத்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளர், தெற்கு ரயில்வே பொது மேலாளர், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

மேலும், தமிழ்நாடு காவல்துறை டிஜிபி, தீயணைப்புத்துறை டிஜிபி, தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோரும் குழுவில் இடம்பெறுகின்றனர்.

இதனிடையே, தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழாவினை தமிழ் மொழியிலேயே நடத்த உத்தரவிட கோரி உயர்நீதிமன்ற கிளையில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, கடைசியாக குடமுழுக்கு விழா எந்த மொழியில் நடத்தப்பட்டது? என கேள்வி எழுப்பியது.

சமஸ்கிருதத்தில் நடத்தப்பட்டது என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது, தமிழில் அர்ச்சனை செய்ய நபர்கள் இல்லை என்றும், ஆனால், தற்போது, சைவ அர்ச்சனை பயிற்சி பெற்றவர்கள் உள்ளதால், அவர்களை கொண்டு நடத்தலாம் என்றும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது, ஆகம விதிகளின்படியே குடமுழுக்கு நடைபெற உள்ளதாக, இந்து அறநிலையத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார். இதையடுத்து, பிரகதீஸ்வரர் ஆலய நிர்வாகத்தினரை எதிர்மனுதாரராக சேர்க்க மனுதாரருக்கு உத்தரவிட்டு வழக்கை வருகிற 27-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *