ரஜினி அரசியல்வாதி அல்ல, ஒரு நடிகர்… பெரியார் பற்றி பேசும் போது சிந்தித்து பேசவேண்டும்-ஸ்டாலின்

சென்னை, ஜனவரி-21

ரஜினி அரசியல்வாதி அல்ல. அவர் ஒரு நடிகர். பெரியார் பற்றி பேசும்போது சிந்தித்துப் பேச வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

துக்ளக் பத்திரிகையின் 50-வது ஆண்டு விழாவில் ரஜினிகாந்த் பேசிய பேச்சு பெரும் சர்ச்சையானது. பெரியார் பற்றி தவறான கருத்துக்களை கூறியதற்காக ரஜினிகாந்த் மன்னிப்பு கோரவேண்டும் என திராவிடர் இயக்கத்தினர் கூறிவந்த நிலையில், இன்று காலை செய்தியாளர்களை சந்தித்து தான் சொன்ன கருத்து சரியானதுதான். அதிலிருந்து பின்வாங்கப் போவதில்லை என்று தெரிவித்தார்.

இந்நிலையில் சென்னை, அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக அவசரச் செயற்குழு கூட்டத்திற்கு பின்பு மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது ஸ்டாலின் கூறியதாவது: ”தேசிய குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய மக்கள்தொகை பதிவேடு உள்ளிட்டவற்றை கண்டிக்கும் வகையில் திமுக தலைமையில் அனைத்து கட்சிக் கூட்டம் ஜனவரி 24-ம் தேதி நடைபெறுகிறது. ஹைட்ரோகார்பன் திட்டத்தில் எடப்பாடி பழனிசாமி அரசு நாடகம் நடத்துகிறது. தைரியத்துடன் மத்திய அரசை தட்டி கேட்பதற்கு அதிமுக அரசுக்கு தெம்பு இல்லை.

நண்பர் ரஜினிகாந்த் அரசியல்வாதி அல்ல, அவர் ஒரு நடிகர். அவரிடம் விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன். 95 ஆண்டு காலம் தமிழ் இனத்திற்காக போராடிய பெரியாரை பற்றி பேசும்போது யோசித்து சிந்தித்து பேச வேண்டும்”. இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *