காங்கிரஸ் கூட்டணிக்கு நோ.. கர்நாடகாவில் 15 தொகுதிகளிலும் தனித்தே போட்டி – தேவகவுடா அதிரடி
கர்நாடகா சட்டசபை இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் தனித்துப் போட்டியிட உள்ளது என முன்னாள் பிரதமரும், அக்கட்சியின் தேசிய தலைவருமான தேவே கவுடா தெரிவித்துள்ளார்.
பெங்களூரு, செப்-21
கர்நாடகாவில் 15 சட்டசபை தொகுதிகளுக்கு அக்டோபர் 21-ம் தேதி இடைத் தேர்தல்கள் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. காங்கிரஸ்-ஜேடிஎஸ் எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் இந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்கள் நடைபெறுகின்றன. தங்களது தகுதி நீக்கத்தை எதிர்த்து 17 எம்.எல்.ஏக்கள் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நிலுவையில் இருக்கிறது. அதனால் அவர்கள் தற்போதைய இடைத்தேர்தல்களில் போட்டியிட முடியாத நிலை உள்ளது. இதனிடையே 15 தொகுதிகளிலுமே மதச்சார்பற்ற ஜனதா தளம் தனித்தே போட்டியிடும்; காங்கிரசுடன் கூட்டணி இல்லை என்று முன்னாள் பிரதமர் தேவகவுடா அறிவித்திருக்கிறார். இத்தேர்தலின் மூலம் குமாரசாமி தலைமையிலான அரசை கவிழ்த்தவர்களுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் அறிவித்துள்ளது.