ஆசியாவிலேயே மிகப் பெரிதாக அமைகிறது கோவை வெள்ளலூரில் பேருந்து நிலையம்!!!

கோவை, ஜனவரி-20

தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக வேகமாக வளர்ந்து வரும் தொழில் நகரமாக கோவை மாவட்டம் திகழ்ந்து வருகிறது. மக்கள் தொகை அதிகம் உள்ள கோவையில் காந்திபுரம், சிங்காநல்லூர், உக்கடம், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இதனால் அதிகளவு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதற்கு தீர்வு காணும் வகையில் கோவை வெள்ளலூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சட்டசபையில் விதி எண் 110-ன் கீழ் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் அந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக புதிய பேருந்து நிலையம் அமைக்க 168 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பி அண்ட் சி கட்டுமான நிறுவனம் சார்பில் கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ள ஒப்பந்த அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் போல் மிகப்பெரிய அளவில் அமையவுள்ள இந்த புதிய பேருந்து நிலையத்தில், ஒரே நேரத்தில் 140 பேருந்துகளை நிறுத்த முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டால் கோவையில் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் ஆசியாவிலேயே மிகப் பெரியதாக அமைய உள்ளது. 61 ஏக்கர் நிலப்பரப்பளவில் இந்த ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தை கட்ட தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. இந்த பேருந்து நிலையத்தில் வெளியூர் செல்லும் பேருந்துகளும், உள்ளூர் செல்லும் பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது.

எல்லாவற்றுக்கும் மேலாக கோவை நகரில் செயல்படுத்தப்பட உள்ள மெட்ரோ ரயில் சேவையும், இந்த பேருந்து நிலையத்துடன் இணைக்கப்பட உள்ளது. சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்துக்குள் மெட்ரோ ரயில் நிலையம் இருப்பது போன்று கோவை வெள்ளலூரில் அமைக்கப்பட உள்ளது.

ஒருங்கிணைந்த பேருந்து நிலைய வளாகத்துக்குள், பணிமனை, போக்குவரத்து ஊழியர்கள் தங்குமிடம், பயணிகள் ஒய்வு அறைகள், கடைகள், வாடகை ஊர்திகளுக்கான அலுவலகங்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் நவீன வசதிகள் அமைய உள்ளன.

இந்த பேருந்து நிலையத்தின் மேற்கூரை முழுவதும் சோலார் பேனல்கள் பொருத்தப்பட உள்ளது. இந்த பேருந்து நிலைய பணிகளை தொடங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி விரைவில் அடிக்கல் நாட்டுவார் எதிர்பார்க்கப்படுகிறது.

கோவைக்கு மட்டுமல்ல தமிழகத்துக்கே பெருமை சேர்க்கும் வகையில் இந்த பேருந்து நிலையத்தை செயலாக்கத்துக்கு கொண்டு வரும் முனைப்பில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *