கர்நாடகாவில் 15 சட்டசபை தொகுதிகளுக்கு அக். 21-ல் இடைத் தேர்தல்

கர்நாடகாவில் 15 சட்டசபை தொகுதிகளுக்கு அக்டோபர் 21-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.

பெங்களூரு, செப்-21

கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜூலை மாதம் காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் கட்சிகளின் 17 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்தனர். இதையடுத்து சபாநாயகராக இருந்த ரமேஷ்குமார் 17 எம்.எல்.ஏக்களையும் தகுதி நீக்கம் செய்தார். இதன்படி 2023-ம் ஆண்டு வரை தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது.

ஆனால் சபாநாயகரின் தகுதி நீக்க உத்தரவுக்கு எதிராக 17 பேரும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இவ்வழக்கின் விசாரணை வரும் 23-ந் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் மகாராஷ்டிரா, அரியானா மாநில சட்டசபைகளுக்கான தேர்தல் தேதியை இன்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. மேலும், 17 மாநிலங்களில் உள்ள 63 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் காலியாக உள்ள ஒரு தொகுதி என மொத்தம் 64 தொகுதிகளுக்கு அதே தேதியில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவின் 15 சட்டசபை தொகுதிகளுக்கும் அக்டோபர் 21-ல் இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் காலியாக உள்ள மஸ்கி மற்றும் ராஜராஜேஸ்வரி நகர் ஆகிய 2 தொகுதிகள் குறித்து தேர்தல் ஆணையம் எந்த அறிவிப்பும் வெளியிடவும் இல்லை. இடைத்தேர்தல் நடைபெறும் 15 தொகுதிகளில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 24-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

உச்சநீதிமன்றத்தில் எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்க வழக்கின் விசாரணை வரும் 23-ந் தேதி நடைபெறும் அதே நாளில்தான் இடைத்தேர்தல் நடைபெறும் 15 தொகுதிகளிலும் வேட்பு மனுத்தாக்கல் தொடங்குகிறது. வேட்புமனுத் தாக்கல் செய்ய செப்டம்பர் 30-ந் தேதி கடைசி நாளாகும். வேட்பு மனுக்கள் மீது அக்டோபர் 1-ல் பரிசீலனை நடைபெறும். வேட்புமனுக்களை வாபஸ் பெற அக்டோபர் 3 கடைசிநாளாகும். அனைத்து தேர்தல் நடைமுறைகளும் அக்டோபர் 27-ல் நிறைவடையும்.

இதுதவிர பீகார் மாநிலத்தில் காலியாக உள்ள சமஸ்திபூர் மக்களவைத் தொகுதிக்கும் அக்டோபர் 21-ல் இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. 24-ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *