ஆந்திர மாநிலத்துக்கு 3 தலைநகரம்: எதிர்ப்புகளுக்கு இடையே மசோதா பேரவையில் தாக்கல்

அமராவதி, ஜனவரி-20

விவசாயிகள் மற்றும் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் ஆந்திர மாநிலத்துக்கு 3 தலைநகரங்களை உருவாக்கும் மசோதா சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதன்படி அமராவதி தவிர்த்து விசாகப்பட்டினம் மற்றும் கர்னூல் ஆகிய இரு நகரங்களும் தலைநகரங்களாக மேம்படுத்தப்பட உள்ளன.

ஆந்திராவின் தலைநகராக அமராவதி நகரை உலகத்தரம் வாய்ந்த நகராக உருவாக்க வேண்டும் என்பது முன்னாள் முதல்வர், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவின் கனவுத்திட்டமாகும்.

இதற்காக விவசாயிகளிடம் இருந்து கடந்த 2015-ம் ஆண்டு 33 ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு, அவர்களுக்கு இழப்பீடும் அறிவிக்கப்பட்டது. கடந்த 2015-ம் ஆண்டு அக்டோபர் மாதம் பிரதமர் மோடி அமராவதி நகருக்கு அடிக்கல் நாட்டினார்.

ஏறக்குறைய ரூ.1 லட்சம் கோடி மதிப்பீட்டில் அமராவதி நகரம் கிருஷ்ணா நதிக்கரையின் ஓரத்தில் ஏறக்குறைய உருவாக்கப்பட்டுவிட்டது. இந்த சூழலில் சட்டப்பேரவை தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைமையில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சிக்கு வந்தார்.

முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி வந்தபின், முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்த பல்வேறு திட்டங்களும் மறு ஆய்வு செய்யப்படும் என அறிவித்தார். அமராவதி நகரில் நடந்துவரும் பல்வேறு கட்டுமான திட்டங்களில் ஊழல் நடப்பதாக கூறி அந்த திட்டங்களை நிறுத்தினார். அந்த நிறுவனங்களின் ஒப்பந்தத்தையும் ரத்து செய்தார்.

இது தொடர்பாக ஒப்பந்த நிறுவனங்கள் ஆந்திர அரசுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அந்த வழக்கும் விசாரணையில் இருக்கிறது. இந்த சூழலில் கடந்த ஆண்டு டிசம்பர் 17-ம் தேதி முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி வெளியிட்ட அறிவிப்பில், ஆந்திர மாநிலத்துக்கு அமராவதி தவிர்த்து இன்னும் இரு தலைநகரங்கள் உருவாக்கப்படும் என அறிவித்தார்.

ஆந்திர அரசு அமைத்த வல்லுநர் குழுவும், பாஸ்டன் ஆலோசனை நிறுவனமும் இதேபோன்ற பரிந்துரைகளை ஆந்திர அரசுக்கு அளித்தது. இந்தப் பரிந்துரைகளையும் அறிக்கைகளையும் ஆய்வு செய்த அமைச்சரவைக் குழு 3 தலைநகரங்கள் அமைப்பதற்கு ஒப்புதல் அளித்தது.

இதன்படி அமராவதி சட்டப்பேரவை தலைநகராகவும், கர்னூல் நீதிமன்ற தலைநகராகவும், விசாகப்பட்டினம் தலைமை செயலம் மற்றும் நிர்வாக ரீதியான தலைநகராகவும் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

ஆனால், அமராவதி நகர் மட்டுமே தலைநகராக அறிவிக்கப்பட வேண்டும், மற்ற இரு நகரங்களை அறிவிப்பதை கைவிடவேண்டும் எனக் கோரி நிலம் வழங்கிய விவசாயிகளும், எதிர்க்கட்சிகளும் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ஆந்திர அரசின் 3 நாட்கள் சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டம் இன்று தொடங்கியது. விவசாயிகள், எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, 3 தலைநகரங்கள் அமைப்பதற்கான மசோதா ஆந்திர மாநில சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது

ஆந்திரப் பிரதேசம் அதிகாரப் பரவல் மற்றும் முழுமையான வளர்ச்சி 2020- மசோதா என்ற பெயரில் நிதியமைச்சர் புக்கா ராஜேந்திரநாத் ரெட்டி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அப்போது அவர் பேசுகையில், “இந்த மசோதாவின்படி 3 தலைநகரங்கள் ஆந்திராவில் அமைக்கப்பட உள்ளன. அனைத்து மண்டலங்களும் பரவலான வளர்ச்சி அடைய வேண்டும் எனும் நோக்கில் உருவாக்கப்பட உள்ளது.

இதன்படி அமராவதி நகரம் சட்டப்பேரவை தலைநகராகவும், விசாகப்பட்டினம் நிர்வாக ரீதியான தலைநகராகவும், நீதிமன்ற தலைநகராக கர்னூல் நகரும் இருக்கும். இதன்படி அமராவதியில் இருக்கும் தலைமைச் செயலகம் செயல்படாத. விசாகப்பட்டினத்தில் புதிய தலைமைச்செயலகம் செயல்படும்” எனத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *