தமிழறிஞர்களுக்கு விருதுகள்: முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார்

சென்னை, ஜனவரி-20

தமிழறிஞர்கள் உள்ளிட்ட 52 பேருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விருதுகளை வழங்கி கவுரவித்தார்.

தமிழக அரசின் சார்பில் திருவள்ளுவர் திருநாள் மற்றும் தமிழ்நாடு அரசின் விருதுகள் வழங்கும் விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர் சிறப்புரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, குட்டிக்கதை ஒன்றை தெரிவித்து, தமிழறிஞர்கள் காத்திருந்தால் நிச்சயம் அவர்களுக்கான திறமை அங்கீகரிக்கப்பட்டு உரிய விருது அளிக்கப்படும் என்றார். 

தமிழ் அறிஞர் ந. நித்யானந்த பாரதிக்கு திருவள்ளுவர் விருதும், முனைவர் ப. சிவராஜிக்கு மகாகவி பாரதியார் விருதும்,  செஞ்சி ந. இராமச்சந்திரனுக்கு தந்தை பெரியார் விருதும் அளிக்கப்பட்டது.

இதையடுத்து 9 பேருக்கு திருவள்ளுவர் திருநாள் விருதும், 13 பேருக்கு சித்திரை தமிழ்ப்புத்தாண்டு விருதும், 10 பேருக்கு சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருதும், 3 பேருக்கு உலக தமிழ்ச்சங்க விருதும் முதலமைச்சர் வழங்கினார். இதேபோல், 5 பேருக்கு மரபுவழி கலைவல்லுநர்களுக்கான விருதும், 5 பேருக்கு நவீன பாணி கலை வல்லுநர்களுக்கான விருதும், 7 பேருக்கு நூல்கள் நாட்டுடைமை-பரிவுத்தொகை விருதும் வழங்கி முதலமைச்சர் கவுரவித்தார்.

விழாவில் விருதுகளுடன் சேர்த்து அவர்களுக்குரிய பரிசுத் தொகைக்கான காசோலை, ரொக்கப் பரிசு, தங்க பதக்கம் உள்ளிட்டவையும் முதலமைச்சரால் வழங்கப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *