அரசின் திட்டங்களையும், சாதனைகளையும் மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும்-முதலமைச்சர் பழனிசாமி

சென்னை, ஜனவரி-20

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 72-வது பிறந்தநாளை தமிழகம் முழுவதும் விமரிசையாக கொண்டாட அதிமுக அம்மா பேரவை சார்பாக ஆலோசனைக்கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

அதிமுக அம்மா பேரவை மாநில செயலாளரும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த ஆலோசனைக்கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துக்கொண்டு அம்மா பேரவை நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது: தன்னுடைய பிறந்தநாளன்று யாரும் தன்னுடைய இல்லம் வர வேண்டாம் என்றும் ஏழை எளியோர் இல்லங்களை நாடி சென்று அவர்களுக்கு உதவிகள் செய்திட வேண்டும் என்றும் இந்தியாவில் எந்த தலைவரும் சிந்திக்காதவற்றை மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா சிந்தித்து அன்புக்கட்டளையாக விடுத்துள்ளார்.

அந்த வகையில் ஏழை எளிய மக்களுக்கு மருத்துவ முகாம்கள், இரத்ததான முகாம்கள், மாணவர்களுக்கு கல்வி உபகரகணங்கள் வழங்குதல், போன்ற உதவிகளை மக்களுக்கு செய்ய வேண்டும். அதிமுகவில் எந்த அணிகளும் இல்லாத வகையில் அம்மா பேரவை மக்களுக்கு உதவிகள் செய்வதில் முன்னோடியாக திகழ்கிறது.

இதை தொடர்ந்து இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: தன்னுடைய வாழ்நாள் முழுவதும் மக்களுக்காக உழைத்து மக்களின் இதயத்தில் குடியிருந்தவர் ஜெயலலிதா. அவருடைய உடல்நலத்தையும் பொருட்படுத்தாமல் மக்களுக்காக உழைத்தவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா.

தன்னுடைய பிறந்தநாளின் போது ஏழைகளுக்கும், முடியாதவர்ககுக்கும், நோயாளிகளுக்கும் உதவிகள் செய்ய வேண்டும் என்றும் அதுவே தனக்கு செய்யும் நன்றிக்கடன் என்றும் மறைந்த முதல்வர் தெரிவித்துள்ளார். அதனால் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஏழை மக்களுக்கும் அம்மா பேரவை நிர்வாகிகள் உதவிகள் செய்திட வேண்டும்.

முதியோர்களுக்கும், நோயாளிகளுக்கும், மாணவர்களுக்கும் அவரவர் வசதிகளுக்கு ஏற்ப உதவிகள் செய்திட வேண்டும். மேலும் அதிமுக அரசின் திட்டங்களை மக்களுக்கு புரிய வைத்து அவற்றை மக்களிடம் கொண்டு  செல்ல வேண்டும். அம்மா பேரவை அதிமுகவின் இதயம் போன்றது எனவே அனைத்து மக்களும் பாராட்டக்கூடிய அளவில் மறைந்த முதல்வரின் பிறந்தநாள் விழாவை பேரவை நிர்வாகிகள் கொண்டாட வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *