மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக மேலும் 2 உணர்வுப் பூங்கா: சென்னை மாநகராட்சி திட்டம்

சென்னை, ஜனவரி-20

மாற்றுத்திறனாளி குழந்தைகள் விளையாடும் வகையில் சென்னை மாநகராட்சி ஏற்கெனவே ஓர் உணர்வுப் பூங்காவை அமைத்துள்ள நிலையில், மேலும் இரண்டு பூங்காக்களை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி முழுவதும் 669 பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் சிறுவர்கள் விளையாடும் வகையில் ஊஞ்சல், சறுக்கு மரம் போன்ற விளையாட்டு உபகரணங்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால் மாற்றுத்திறனாளி சிறுவர்களால் இந்த பூங்காவில் விளையாட முடியவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இதனையடுத்து சென்னை சாந்தோமில் மாற்றுத்திறனாளிகளுக்காக உணர்வு பூங்கா என்ற பெயரில் பிரத்யேக பூங்கா அமைக்கப்பட்டது. இந்த பூங்காவிற்கு மக்களின் ஆதரவு பெருகியதை அடுத்து வளசரவாக்கம் மற்றும் அடையாறு பகுதிகளில் மேலும் இரண்டு உணர்வுப் பூங்காக்களை அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. அதற்காக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 3 கோடியே 48 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த உணர்வு பூங்காவில் ஒலிகளை உணரும் உபகரணங்கள், பரமபதம், பல்லாங்குழி போன்ற பாராம்பரிய விளையாட்டுகளும் இடம்பெறும். சக்கர நாற்காலியில் அமர்ந்தபடியே விளையாடக்கூடிய கூடைப்பந்து மைதானமும், பார்வை குறைபாடு உள்ள குழந்தைகள் சித்திரங்களை தொட்டுப்பார்த்து கதைகளை உணரும் சுவர்களும் அமைக்கப்பட உள்ளன.

மூலிகைச் செடிகளும் இந்த பூங்காவில் அமைக்கப்படும். அதன்மூலம் வாசனையை வைத்து செடியை சிறுவர்கள் கண்டுபிடிக்கலாம். ஏற்கெனவே சாந்தோமில் உள்ள உணர்வு பூங்காவிலும் இந்த வசதிகள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *