திமுக – காங்கிரஸ் கூட்டணி தொடருமா?: காலம் பதில் சொல்லும்-டி.ஆர்.பாலு

சென்னை, ஜனவரி-14

திமுக – காங்கிரஸ் கூட்டணி பழைய நிலைக்குத் திரும்புமா என்ற கேள்விக்கு காலம் தான் பதில் சொல்லும் என்று டி.ஆர்.பாலு பதிலளித்துள்ளார்.

ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஒன்றிய மற்றும் மாவட்ட தலைவர் பதவி இடங்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்றும் கூட்டணி தர்மத்தை மதிக்க வில்லை எனவும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி கடந்த சில தினங்களுக்கு முன்னால் அறிக்கை வாயிலாக குற்றம் சாட்டியிருந்தார்.

இது திமுக கூட்டணியில் மிகப் பெரிய சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் நேற்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் டெல்லியில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொள்ள டெல்லி சென்றிருந்த திமுகவின் முதன்மை செயலாளரும் நாடாளுமன்ற குழு தலைவருமான டி.ஆர்.பாலு அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் சென்னை திரும்பினார்.

இந்தநிலையில், இன்று காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திமுக நாடாளுமன்ற குழுத்தலைவர் டி.ஆர்.பாலு, ஆர்.எஸ்.பாரதி மற்றும் முக்கிய நிர்வாகிகள் உடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

அதன் பின்னர் பத்திரிகையாளர்களைச் சந்தித்த டி.ஆர்.பாலு, “தமிழக காங்கிரஸ தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராமசாமி ஆகியோர் ஒரு அறிக்கை வெளியிட்டனர். இது குறித்து திமுகவின் பலவேறு கழக தோழர்கள் தலைவரிடமும், என்னிடமும் தங்களது சங்கடத்தை தெரிவித்தனர். நமது கூட்டணியில் தான் காங்கிரஸ் இருக்கிறார்களா எனவும் கேட்டார்கள். ஆகையால் திமுக குறித்த அறிக்கையை கேஎஸ் அழகிரி தவிர்த்திருக்கலாம்.

மேலும் கட்சி தொண்டர்கள் கவலையில் உள்ளார்கள். குறிப்பாக இந்த அறிக்கையின் படி, தலைவர் மீது வைத்த குற்றச்சாட்டாகவே நாங்கள் அதை பார்க்கிறோம். அதனடிப்படையிலேயே டெல்லியில் காங்கிரஸ் நடத்திய கூட்டத்தில் பங்கேற்கவில்லை. திமுக – காங்கிரஸ் கூட்டணி பழைய நிலைக்கு திரும்பியிருக்கிறதா என்பதற்கு காலம் பதில் சொல்லும்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *