ஸ்ரீபெரும்புதூர் கிளாய் ஊராட்சியில் அம்மா இளைஞர் விளையாட்டுத் திட்டம்

 சென்னை.ஜனவரி.13

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று  தலைமைச் செயலகத்தில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் சார்பில் காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம், கிளாய் ஊராட்சி விளையாட்டு மைதானத்தில் அம்மா இளைஞர் விளையாட்டுத் திட்டத்தை காணொலிக் காட்சி மூலமாக துவக்கி வைத்தார்.அதனைத் தொடர்ந்து, அம்மா இளைஞர் விளையாட்டுத் திட்டத்தின் இலச்சினையை முதலமைச்சர் வெளியிட்டார்.

அம்மா இளைஞர் விளையாட்டுத் திட்டத்தின் கீழ், அனைத்து கிராம ஊராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் ஆண்கள் மற்றும் பெண்களுக்காக தனித்தனியாக ‘‘அம்மா இளைஞர் விளையாட்டுக் குழு” அமைக்கப்படும். மேலும், அனைத்து ஊராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் கபடி, வாலிபால் மற்றும் கிரிக்கெட் அல்லது பூப்பந்து அல்லது இதர விளையாட்டுகள், இவற்றில் ஏதேனும் மூன்று விளையாட்டுகளுக்கு ஆடுகளங்கள் அமைத்தல், விளையாட்டு உபகரணங்கள் வழங்குதல், திறந்தவெளி உடற்பயிற்சி மையம் அமைத்தல் மற்றும் விளையாட்டு போட்டிகளை ஊராட்சி ஒன்றிய, மாவட்ட, மாநில அளவில் நடத்துதல், போன்ற இனங்கள் செயல்படுத்தப்படும்.

இளைஞர்களிடையே தலைமைப் பண்பினை வளர்த்தல், கிராம இளைஞர்களிடம் கூட்டு மனப்பான்மையினை உருவாக்குதல், கிராமங்களில் உள்ள விளையாட்டுத் திறன்மிக்க இளைஞர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு முறையான பயிற்சி கொடுத்து அவர்களை உயர்மட்ட போட்டிகளில் சாதனை படைக்க வைத்தல் போன்றவை இத்திட்டத்தின் முதன்மையான நோக்கமாகும்.

மேலும், திருச்சி மாவட்ட விளையாட்டரங்கில் உள்ள விளையாட்டு விடுதியில் 96 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் விடுதிக் கட்டடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

நேபாளத்தில் நடைபெற்ற 13-வது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 36 விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு, தமிழ்நாடு அரசின் சார்பில் உயரிய ஊக்கத் தொகையாக மொத்தம் 2 கோடியே 36 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வழங்கி வாழ்த்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *