அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் கடின உழைப்பால் கோவை மாவட்டம் அதிமுகவின் இரும்புக் கோட்டையாக மீண்டும் நிரூபணம்!!!

கோவை, ஜனவரி-11

தமிழகத்தில் கடந்த 27, 30-ம் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் கடந்த 6-ம் தேதி பதவியேற்றனர்.  ஊராட்சி மன்ற தலைவர்கள் பதவியேற்ற நிலையில் மாவட்ட ஊராட்சி தலைவர், துணைத் தலைவர், ஒன்றிய குழு பெருந்தலைவர், துணைத்தலைவர், ஊராட்சிமன்ற துணை தலைவர் பதவிகளுக்கு இன்று மறைமுக தேர்தல் நடத்தப்பட்டது.

இதன்படி, 27 மாவட்டங்களில் மாவட்ட ஊராட்சி தலைவர், துணைத் தலைவர் மற்றும் 314 ஒன்றிய குழு தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. இதேபோல், 9624 இடங்களுக்கான ஊராட்சி மன்ற துணை தலைவர் தேர்தலும் இன்று நடைபெற்றது.

கோவை மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு இன்று நடைபெற்ற மறைமுக தேர்தலில் அதிமுகவை சேர்ந்த சாந்திமதி மாவட்ட ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். துணைத் தலைவராக அமுல் கந்தசாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இங்கு, மொத்தமுள்ள 17 இடங்களில் அதிமுக கூட்டணி 12 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதேபோல், கோவை மாவட்டத்தில் மொத்தம் 12 ஒன்றியங்களில் 155 பேர் உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதில் அதிமுக கூட்டணி 91 இடங்களில் (83 அதிமுக, 4 பாஜக, 4 தேமுதிக) வெற்றி பெற்றுள்ளது. திமுக கூட்டணி 56 (51 திமுக, 4 காங்கிரஸ், 1 மதிமுக) வெற்றி பெற்றுள்ளனர். சுயேட்சைகள் 8 இடங்கள் வெற்றி பெற்றுள்ளனர். இன்று நடைபெற்ற ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் தேர்தலில் மொத்தமுள்ள 12 தலைவர் பதவிகளையும் அதிமுக கைப்பற்றியிருக்கிறது.

காரமடை, மதுக்கரை, பெரியநாயக்கன் பாளையம், சர்க்கார் சாமகுளம், தொண்டாமுத்தூர், ஆணைமலை, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி (வடக்கு), பொள்ளாச்சி(தெற்கு), அன்னனூர், சூலூர், சுல்தான்பேட்டை ஆகிய 12 ஒன்றியக் குழு தலைவர் பதவிகளையும் அதிமுக கைப்பற்றியுள்ளது.

உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் கடினமான களப்பணி மற்றும் வீதிக்கு வீதி பிரச்சாரம் ஆகியவற்றால் இந்த அபார வெற்றி கிடைத்திருப்பதாக அதிமுகவினர் பெருமிதத்துடன் தெரிவித்திருக்கிறார்கள். இந்த வெற்றி மூலம் கோவை மாவட்டத்தில் அதிமுக மக்கள் செல்வாக்குடன் தொடர்ந்து இருந்து வருவது நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தேர்தல் முடிவுகள் குறித்து தன்னுடைய ட்விட்டரில் பதிவிட்டுள்ள அமைச்சர் எஸ்.பி.வேலுமணி: நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிகமான மக்கள் அதிமுகவை தேர்ந்தெடுத்து கோவை மாவட்டம் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களது கோட்டை என்பதனை மீண்டும் நிரூபித்துள்ளார்கள். என்று தெரிவித்துள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *