கேரளாவில் வீதிமீறி கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு வெடிகுண்டு மூலம் தகர்ப்பு (வீடியோ)

கேரளம், ஜனவரி-11

கேரள மாநிலம், கொச்சியில் உள்ள மரடு பகுதியில் கடலோர ஒழுங்குமண்டல விதிகளை மீறி கட்டப்பட்ட நான்கு அடுக்குமாடி குடியிருப்புகளில் இரண்டு கட்டடங்கள் வெடிகுண்டுகள் மூலம் ஒரு சில நொடிகளில் இடித்து தகர்க்கப்பட்டது.

மரடு பகுதியில் விதிகளை மீறி சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள 4 அடுக்குமாடி குடியிருப்புகளில் மொத்தம் 343 வீடுகள் இருந்தன. இந்த குடியிருப்புகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், அந்த குடியிருப்புகளை இடிக்குமாறு உத்தரவிட்டது.

அடுக்குமாடி குடியிருப்புகளை இடிப்பதற்காக அந்த குடியிருப்புகள் முழுவதும் வெடிபொருள்கள் நிரப்பப்பட்டு, ஒரே நேரத்தில் அனைத்தும் வெடிக்கவைக்கப்பட்டு கட்டடங்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.

முன்னதாக, இன்று காலை 8 மணிக்கே, கட்டடத்தில் வெடிபொருட்கள் நிரப்பும் பணி நிறைவடைந்தது. அந்த கட்டடங்கள் இருக்கும் சுற்றுவட்டாரப் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினரின் கண்காணிப்பில், ஹோலி ஃபெய்த் எச்2ஓ மற்றும் அல்ஃபா செரினீ ஆகிய இரண்டு கட்டடங்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டு ஒரு சில நொடியில் இடித்து தகர்க்கப்பட்டது. அப்போது, கட்டடம் இடிந்துவிழுந்த பகுதியில் மிகப்பெரிய புழுதிப் படலம் ஏற்பட்டது. இதனால் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பாதிப்பு ஏற்படாத வகையில் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் ஈடுபட்டனர்.

கட்டடங்களை இடிக்கும் பணியை முன்னிட்டு சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள அனைத்து மக்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனா். இதுதொடா்பாக அந்த பகுதியில் உள்ள மக்களுக்கு இரண்டு நாள்களுக்கு முன்னதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

அந்த பகுதியில் ஆளில்லா விமானங்கள் பறக்க விடுவதற்கும் தடை விதிக்கப்பட்டது. சனிக்கிழமை காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை தடை உத்தரவு அமலில் இருக்கும். தடையை மீறி ஆளில்லா விமானங்கள் பறக்கவிடப்பட்டால் அவை சுட்டு வீழ்த்தப்படும். நீா்வழி, வான்வெளி, சாலைவழி என அனைத்து வழி போக்குவரத்துக்கும் அந்த பகுதியில் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

நன்றி- ஏ.என்.ஐ.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *