அமலுக்கு வந்தது குடியுரிமை திருத்த சட்டம், மத்திய அரசின் அரசிதழில் வெளியீடு

டெல்லி, ஜனவரி-11

நாடாளுமன்றத்தில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்த சட்டம் ஜனவரி-10 முதல் (வெள்ளிக்கிழமை) அமலுக்கு வருவதாக மத்திய அரசு அரசிதழில் அறிவிப்பை  வெளியிட்டது.

சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் கடந்த மாதம் 11ம் தேதி இந்த சட்டம் விவாதத்திற்கு பின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது.

இச்சட்டத்தின்படி, பாகிஸ்தான், வங்காளதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில் மத துன்புறுத்தல்களுக்கு உள்ளாகி அகதிகளாக 2014ம் ஆண்டு டிசம்பர் 31 வரை இந்தியாவுக்குள் வந்த இந்துக்கள், சீக்கியர்கள், புத்திஸ்டுகள், சமணர்கள், பார்சிக்கள் மற்றும் கிறிஸ்துவ மதத்தை சார்ந்தவர்கள் சட்டவிரோத குடியேறிகளாக கருதப்படமாட்டார்கள். மாறாக, அவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் என்பதே இச்சட்டத்தின் சாரம்சமாகும்.

இதில் முஸ்லிம்கள் மட்டும் தவிர்க்கப்பட்டனர்.  இதனால் இந்தச் சட்டத்திற்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தொடர் போராட்டங்கள் நடந்து வருகிறது. நாட்டில் முதல் முறையாக மதத்தின் அடிப்படையில் குடியுரிமை வழங்குவதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டியதோடு, இது இந்திய அரசியலமைப்பின் அடிப்படையை சிதைப்பதாகும் என்றும் கூறி வருகின்றனர்.

எனினும், எக்காரணம் கொண்டும் எதிர்ப்புகளுக்கு அரசு பணியாது. இந்த சட்டத்தை அமல்படுத்தியலிருந்து ஒருபோதும் பின்வாங்கமாட்டோம் என்று சமீபத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா  கூறியிருந்தார். இதன்தொடர்ச்சியாக நேற்று இரவு மத்திய உள்துறை அமைச்சகம் அரசிதழில் அறிவிப்பாணையை வெளியிட்டது.

இதன்படி, குடியுரிமை திருத்த சட்டம் ஜனவரி 10ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இதற்கான விதிமுறைகள் வகுக்கும் முன்பாகவே அவசர அவசரமாக அமல்படுத்தப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *