மாவட்ட ஊராட்சி தலைவர், ஒன்றிய தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல்-அதிமுக-திமுக இடையே கடும் போட்டி

சென்னை, ஜனவரி-11

தமிழகத்தில் மாவட்ட ஊராட்சி தலைவர் மற்றும் ஒன்றிய தலைவர் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் இன்று தொடங்கியது. இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் 10 மாவட்டங்களை தவிர்த்து, மீதமுள்ள 27 மாவட்டங்களில் உள்ள ஊரக பகுதிகளுக்கு கடந்த மாதம் 27 மற்றும் 30-ந் தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது. ஊராட்சி உறுப்பினர், ஊராட்சி தலைவர், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் ஆகிய 4 பதவிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனால் ஒவ்வொரு வாக்காளரும் 4 ஓட்டுகள் போட்டனர். இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 2 மற்றும் 3-ந் தேதிகளில் எண்ணப்பட்டன.

மொத்தம் உள்ள 515 மாவட்ட கவுன்சிலர், 5,090 ஒன்றிய கவுன்சிலர் உள்பட 91,975 பதவிகளுக்கு வாக்கு எண்ணிக்கை நடத்தி முடிவுகள் அறிவிக்கப்பட்டன. ஊராட்சி தலைவர்கள் மட்டும் நேரடியாக தேர்ந்து எடுக்கப்பட்டனர். உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் கடந்த 6-ந் தேதி பதவி ஏற்றுக்கொண்டனர்.

இந்த நிலையில், மாவட்ட பஞ்சாயத்து தலைவர், துணைத்தலைவர், ஒன்றிய தலைவர், ஒன்றிய துணைத்தலைவர், ஊராட்சி துணைத்தலைவர் ஆகியோரை தேர்ந்து எடுப்பதற்கான மறைமுக தேர்தல் இன்று நடைபெறுகிறது. முதலில், மாவட்ட ஊராட்சி  தலைவர், ஒன்றிய தலைவர், ஊராட்சி துணைத்தலைவர் பதவிகளுக்கு காலை 11 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல், ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட ஊரக முகமை வளர்ச்சி அலுவலகத்திலும், ஒன்றிய தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் அந்தந்த ஒன்றிய அலுவலகங்களிலும், பஞ்சாயத்து துணைத்தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் அந்தந்த பஞ்சாயத்து அலுவலகங்களிலும் நடைபெறுகிறது.

போட்டியில்லாத இடங்களில் தலைவர்கள், துணைத்தலைவர்கள் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். போட்டி இருக்கும் இடங்களில் மட்டும் மறைமுக வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

அதன்பின்னர் மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர், ஒன்றிய துணைத்தலைவர் பதவிகளுக்கு பிற்பகல் 3 மணிக்கு மறைமுக தேர்தல் நடக்கிறது. மாவட்ட பஞ்சாயத்து மற்றும் பஞ்சாயத்து யூனியன்களை கைப்பற்றுவதில் அதிமுக, திமுக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *