பொதுக் கழிப்பிடங்களை பராமரிக்க தனியார் நிறுவனங்கள் முன்வரவேண்டும்-ஆணையர் பிரகாஷ்

சென்னை, ஜனவரி-10

பொதுக் கழிப்பிடங்களை தனியார் நிறுவனங்கள் புதுப்பித்து பராமரிக்க முன் வரவேண்டும் என்று சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் கேட்டுக்கொண்டுள்ளார்.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பெருநிறுவன சமூக பங்களிப்பு நிதி திட்டத்தின் கீழ் பொதுக்கழிப்பிடங்களை மேம்படுத்துதல் மற்றும் பராமரிப்பது தொடர்பான வங்கிகள் மற்றும் தனியார் நிறுவனங்களுடனான கூட்டம் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தலைமையில் ரிப்பன் மாளிகை கூட்டரங்கில் நடைபெற்றது.

கூட்டத்தின்போது ஆணையர் பிரகாஷ் தெரிவித்ததாவது: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 853 பொதுக் கழிப்பிடங்களில் 6,641 கழிவறைகள் உள்ளன. இந்திய அரசின் நிறுவனங்களின் விதிப்படி, தனியார் நிறுவனத்தின் 2 சதவீதம் நிதியினை சமூக பங்களிப்பிற்காக பயன்படுத்தலாம் எனவும், அவற்றை பொதுக்கழிப்பிடத்தின் பராமரிப்பு செயல்பாட்டிற்காக பயன்படுத்தலாம் எனவும்,

பெருநிறுவன சமூக பங்களிப்பு நிதியின் கீழ் விருப்பமுள்ள நிறுவனங்கள் பொதுக்கழிப்பிட பராமரிப்பை தங்கள் நிறுவனத்தின் சொந்த செலவில் மேற்கொள்ளலாம் எனவும், விருப்பமுள்ள தனியார் நிறுவனங்கள் தமிழ்நாடு அரசின் விதிகளுக்கு உட்பட்டு தங்களின் விளம்பரங்களையும் மற்றும் வங்கிகள் தானியங்கி இயந்திரங்களையும் வைத்துக் கொண்டு, கழிப்பறைகளை புதுப்பித்து, பராமரித்துக் கொள்ளலாம் எனவும் தெரிவித்தார்.

தொடர்ந்து, இந்தக் கழிப்பிடங்களை பராமரிக்கும் பணியில் விருப்பமுள்ள நிறுவனங்கள் சென்னை மாநகராட்சி www.chennaicorporation.gov.in என்ற இணையதளத்தில் பார்த்து தங்களது விருப்பத்திற்கேற்ற கழிப்பறைகளை தேர்ந்தெடுத்துக் கொண்டு பராமரிக்கலாம்.

ஏற்கனவே இதேபோன்று, பெருநிறுவன சமூக பங்களிப்பு நிதியின் கீழ் கோடம்பாக்கம் மண்டலம், வார்டு 136 ல் உள்ள பனகல் பூங்கா அருகில் அமைந்துள்ள பொதுக்கழிப்பிடத்தை ZRII என்ற தனியார் நிறுவனம் புதுப்பித்து, பராமரித்து வருகின்றனர். எனவே அதுபோல மற்ற நிறுவனங்களும் ஏனைய பொதுக்கழிப்பிடங்களை பராமரிக்க முன்வர வேண்டும் என ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார். இந்த கூட்டத்தில் துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *