முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்துக்கு உதவ 37 அதிகாரிகள் நியமனம்

டெல்லி, ஜனவரி-10

முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத்துக்கு உதவ 2 இணை செயலாளர், 13 துணை செயலாளர் மற்றும் 22 செயலாளர்கள் என 37 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் சுதந்திர தினத்தன்று உரையாற்றும் போது, முப்படைகளுக்கும் சேர்த்து தலைமை தளபதி பதவியை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தார்.

அதன்படி, கடந்த மாதம் பிரதமர் தலைமையில் நடைபெற்ற மத்திய மந்திரி சபை கூட்டத்தில், தரைப்படை, கடற்படை மற்றும் விமானப்படைக்கும் சேர்த்து ஒரே தலைமை தளபதியை நியமிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதையடுத்து ராணுவ தலைமை தளபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பிபின் ராவத்தை, புதிதாக உருவாக்கப்பட்டுள்ள முப்படை தலைமை தளபதியாக மத்திய அரசு நியமித்தது.

முப்படை தலைமை தளபதியின் தலைமையில் செயல்படுவதற்காக, ‘ராணுவ விவகாரங்கள் துறை’ என்ற புதிய துறையையும் மத்திய அரசு உருவாக்கியது. இந்த துறை ராணுவம் கடற்படை, விமானப்படை ஆகிய மூன்று படைகள் தொடர்பான பணிகளை மேற்கொள்ளும்.

படைகளுக்கு தேவையான தளவாடங்கள், ஆயுதங்கள் கொள்முதல் செய்யும் பணிகளும் இந்த துறை மூலம் மேற்கொள்ளப்படும். குறிப்பாக, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட படைக்கருவிகளை பயன்படுத்துவதை இந்த துறை ஊக்குவிக்கும். இந்நிலையில் முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத்துக்கு உதவ 37 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *