உள்ளாட்சி அமைப்புகளுக்கான மானியத் தொகையில் 1,608 கோடி ரூபாயை விடுவித்தது மத்திய அரசு: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

நகர்ப்புறம் மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு அடிப்படை மானியத் தொகையான 1,608 கோடி ரூபாயை மத்திய அரசு விடுவித்திருப்பதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

சென்னை, செப்-19

சென்னை வள்ளுவர்கோட்டத்தில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பாக 9 கோடி ரூபாய் மதிப்பில் நாப்கின்கள் கொள்முதல் செய்வதற்கான பணி ஆணை மற்றும் 91 ஒப்பந்த பணியாளர்களுக்குரிய பணி ஆணைகளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார். பின்னர் 2019 – 2020ஆம் ஆண்டிற்கான அம்மா இருசக்கர வாகன திட்டத்தை துவக்கி வைத்தார்.

பின்னர் மகளிர் சுய உதவி குழுக்களின் நவராத்திரி பொம்மைகள் விற்பனை கண்காட்சியையும் தொடங்கி வைத்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.பி.வேலுமணி, 14ஆவது மத்திய நிதி ஆணையத்தின் பரிந்துரையின் பேரில், தமிழக நகர்ப்புறம் மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2015 – 16 தொடங்கி 2019 – 20 வரையில் 8 ஆயிரத்து 531 கோடியே 94 லட்சம் ரூபாயை மத்திய அரசு விடுவித்து இருப்பதாகக் கூறினார். தற்போது ஆயிரத்து 608 கோடியே 3 லட்சம் ரூபாயை மத்திய அரசு விடுவித்து இருப்பதாகவும், இன்னும் 3 ஆயிரத்து 369 கோடியே 5 லட்சம் ரூபாய் தவணைத் தொகையை விடுவிக்க, மத்திய அரசுக்கு வலியுறுத்தப்படும் என்று குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *