ஜம்மு-காஷ்மீர் கட்டுப்பாடு: 7 நாட்களுக்குள் மறுபரிசீலிக்க உத்தரவு

டெல்லி, ஜனவரி-10

ஜம்மு காஷ்மீரில் 7 நாட்களில் அனைத்து கட்டுப்பாடுகளையும் மறுஆய்வு செய்து தகவல்களை வெளியப்படையாக வெளியிட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்து 370-வது பிரிவு கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி ரத்து செய்யப்பட்டது. அதற்கு முந்தைய நாள் ஜம்மு காஷ்மீர் முழுவதும் செல்போன்களுக்கு எஸ்.எம்.எஸ். வசதி, இணைய வசதி, லேண்ட்லைன் வசதி இணைப்பும் ரத்து செய்யப்பட்டது.

அதன்பின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்து யூனியன் பிரதேசமாக மத்திய அரசு அறிவித்தது. இந்த முறை கடந்த அக்டோபர் மாதம் 31-ம் தேதி நடைமுறைக்கு வந்தது.
இதனை அமல்படுத்தும் நடவடிக்கையாக அம்மாநில அரசியல் கட்சி தலைவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டனர். சிலர் கைது செய்யப்பட்டனர். இணைய, மொபைல் சேவைகள் முற்றிலும் முடக்கப்பட்டன. பல்வேறு இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அதன்பின் படிப்படியாக பல்வேறு வசதிகளை படிப்படியாக ஜம்மு நிர்வாகம் அளித்து வந்தது. லேண்ட் லைன் போன் வசதியும், மொபைல் போஸ்ட் பெய்ட் வசதியும் படிப்படியாக வழங்கப்பட்டது.

ஜம்மு காஷ்மீரில் விதிக்கப்பட்ட தடைகளுக்கு எதிராக காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட பலர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். மேலும் பல்வேறு தரப்பு சார்பில் பொதுநல வழக்குகளும் தொடுக்கப்பட்டன.

இந்த வழக்குகளை நீதிபதிகள் என்.வி.ரமணா, ஆர்.சுபாஷ் ரெட்டி, பி.ஆர்.கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது. இந்த வழக்கில் விசாரணை முடிந்த நிலையில் இன்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியதாவது: ‘‘தனிநபர் சுதந்திரம், பாதுகாப்பை காப்பது நீதிமன்றத்தின் கடமை. இணையதளம் என்பதும் கருத்துரிமையின் ஒருபகுதியே. மிக மிக அசாதரண சூழ்நிலையில்தான் இணையதளத்தை முடக்க வேண்டும். காலவரையறை இன்றி இணையம் முடக்கப்படுவதை ஏற்க முடியாது. 7 நாட்களில் அனைத்து கட்டுப்பாடுகளையும் மறுஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *