சென்னை மாநகராட்சியில் பல வசதிகளுடன் கூடிய ஸ்மார்ட் மின்கம்பம்!!!

சென்னை, ஜனவரி-09

‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சி நவீனமையமாகி வருகிறது. புதிய விஷயங்களை ஆராய்ந்து அதனை செயல்படுத்துவதில் சென்னை மாநகராட்சி வெற்றி கண்டுள்ளது. அந்த வகையில், சென்னை ரிப்பன் மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள ஸ்மார்ட் மின்கம்பம், பார்ப்பவர்களை ஒருகணம் வியப்பில் ஆழ்த்துகிறது.

ஒரு மின்கம்பத்தில் இத்தனை வசதிகளா? என்று யோசிக்க வைக்கிறது. சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஸ்மார்ட் மின்கம்பங்கள் அங்கு இதற்கென பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டிருக்கும். ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்ட நிதியின் கீழ் இந்த ஸ்மார்ட் மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், 50 இடங்களில் இதைப் பொருத்தும் பணி தற்போது நடைபெறுகிறது.

இந்த கம்பங்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் 24 மணி நேரமும் காட்சிகள் பதிவாகின்றன. இதன்மூலம், இரவு நேரங்களில் குற்றச் சம்பவங்கள் தவிர்க்கப்படும். பாதுகாப்பு கேமரா வைக்க முடியாத சாமான்ய மக்கள் பாதிக்கப்படுவது இதன்மூலம் தவிர்க்கப்பட வாய்ப்பு உள்ளது.

மழை அளவைக் கணக்கிடும் கருவியும் இந்தக் கம்பத்தில் பொருத்தப்பட்டுள்ளது. அதன்மூலம், ஒவ்வொரு பகுதியிலும் எத்தனை சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது என்பதை உடனடியாக துல்லியமாக கணக்கிடமுடியும். அப்படி பெறப்படும் தகவல்கள் மூலம், அந்தப் பகுதியின் வெள்ள அபாய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க முடியும்.

பேரிடர் காலங்களில் தொலை தொடர்பு துண்டிப்பால் மக்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள். அதனைச் சரிசெய்யும் வகையில், இதிலுள்ள ஒலிபெருக்கியை வைத்து எல்லா இடங்களுக்கும் மீட்பு குறித்த தகவல்களை அனுப்ப முடியும்.

அதுமட்டுமின்றி, செல்போனில் தொடர்பு இல்லாமல் இருந்தாலும், செல்போனில் சார்ஜ் இல்லாமல் இருந்தாலும், அதற்கும் ஒரு வழியை வைத்திருக்கிறது இந்தக் ஸ்மார்ட் மின்கம்பம். கம்பத்தில் ஒரு பட்டன் பொருத்தப்பட்டுள்ளது. அந்த பட்டன் உதவியுடன் பொதுமக்களாலும் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்புகொள்ள முடியும். தங்கள் நிலையைக் கூறி மீட்புப் பணியை அழைக்க முடியும்.

காற்று மாசை கணக்கிடும் கருவியும் இந்தக் கம்பத்தில் இணைக்கப்பட்டுள்ளதால், ஒவ்வொரு பகுதியிலும் நிலவும் காற்று மாசின் அளவைத் துல்லியமாகக் கண்டறிய முடியும். அதைத் தொடர்ந்து, அதைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளையும் எடுக்க முடியும்.

முதற்கட்டமாக செயல்பாட்டுக்கு வரும் சில கம்பங்களின் பயன்பாட்டைக் கருத்தில்கொண்டு, நகரம் முழுவதும் இந்தத் திட்டத்தை விரிவுபடுத்தப்படும் என கூறப்படுகிறது. ஒளி, ஒலி, சிசிடிவி, மழை அளவு கண்டறியும் கருவி, காற்று மாசு அளவு கணக்கிடும் கருவி, அவசர காலத்தில் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்புகொள்ளும் வசதி எனப் பல அம்சங்கள் அடங்கிய ஒற்றைக் கம்பம், சென்னை மக்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும். இரண்டு நிமிடம் நின்று சுற்றிப்பார்த்துவிட்டுச் செல்லும் அளவுக்கு ஆச்சர்யமூட்டும் தொழில்நுட்பங்களோடு அமைந்துள்ளது இந்த ஸ்மார்ட் மின்கம்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *