தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

சென்னை, ஜனவரி-09

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நிறைவடைந்ததையடுத்து, தேதி குறிப்பிடாமல் அவையை சபாநாயகர் தனபால் ஒத்திவைத்தார்.

நடப்பாண்டுக்கான தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் கடந்த 6ஆம் தேதி கூடியது. தமிழக அரசின் பல்வேறு அறிவிப்புகளை ஆங்கிலத்தில் ஆளுநர் உரையாற்றினார். இதனிடையே, குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் ஆளுநரிடம் கோரிக்கை விடுத்தன. ஆனால் அதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டதால் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

இதனையடுத்து, தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரை ஜனவரி 9ஆம் தேதி (இன்று) வரை அவையை நடத்துவது என முடிவெடுக்கப்பட்டு, தொடர்ந்து பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வந்தது.

தமிழகத்தில் கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் 4 புதிய மருத்துவக் கல்லூரிகள் துவங்க அனுமதி கேட்டுள்ளோம் என்று சட்டப்பேரவையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்தது, மேகதாது அணை விவகாரத்தில் சட்டப்போராட்டம் மூலமாக வெற்றி அடைவோம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழக சட்டப்பேரவையில் அறிவித்தது, என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது வெளியிடப்பட்டன.

இந்நிலையில், மூன்று நாட்களுக்கு நடைபெற்ற கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைந்தது. இதையடுத்து தமிழக சட்டப்பேரவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக சபாநாயகர் தனபால் அறிவித்தார்.

கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று மட்டும், மேயர் நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர் பதிவுகளுக்கு மறைமுகத் தேர்தல் நடத்த வகை செய்யும் சட்ட மசோதா உள்ளிட்ட 15 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *