தமிழகத்தில் கனமழை பெய்யப்போகும் 14 மாவட்டங்கள் – வானிலை மையம் தகவல்
அடுத்த 24 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, செப்-19
கடந்த 24 மணிநேரத்தை பொறுத்தவரையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை உள்பட வட தமிழகத்தில் நேற்றிரவு பலத்த மழை பெய்தது. குறிப்பாக திருவள்ளூர் மற்றும் சென்னை மாவட்டங்களில் விடிய விடிய கனமழை பெய்தது. திருவள்ளூரில் ஒரே நாளில் 21 செ.மீ மழை பெய்துள்ளது. பூண்டியில் 20 செ.மீ மழையும் , திருத்தணி மற்றும் தாமரைப்பாக்கத்தில் 15 செ.மீ மழையும், சோழவரத்தில் 13 செ.மீ மழையும், திருவிலாங்காட்டில் 12 செ.மீ மழையும், பள்ளிப்பட்டு, ஆர்கே பேட்டை மற்றும் கும்மிடிப்பூண்டியில் தலா 10 செ.மீ மழை செய்துள்ளது. சென்னை மீனம்பாக்கத்தில் 6 செ.மீ மழையும், கிண்டியில் 36.செ.மீ மழையும். கொளப்பாக்கத்தில் 3.6 செ.மீ மழையும் பெய்துள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தில், செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், தெற்கு ஆந்திரா மற்றும் வடதமிழகம் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறதாகக் கூறினார். இதன்காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் திருவள்ளூரில் அதிகபட்சமாக 22 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக தெரிவித்தார். அடுத்த 24 மணி நேரத்தில் வடதமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் , தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் மிதமான மழை பெய்யக் கூடும் எனவும் அவர் தெரிவித்தார். மேலும், மூன்று நாட்களுக்கு மழை தொடரும் என்றும் பாலச்சந்திரன் கூறினார்.
ஜூன் முதல் தற்போது வரையிலான தென்மேற்கு பருவமழை காலத்தில் தமிழகத்தில் இயல்பை விட 8 சதவீதமும், சென்னையில் 29 சதவீதமும் கூடுதலாக மழை பெய்திருப்பதாகவும் பாலச்சந்திரன் கூறினார்.