சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தேரோட்டம்!!!

சிதம்பரம்.ஜனவரி.9

 சிதம்பரம் நடராஜர் கோயில் மார்கழி  ஆருத்ரா பெருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற   தேரோட்டத்தில் ஆயிரிக்கணக்கானோர் தரிசனம் செய்தனர்.

பூலோக கைலாசம் என்றழைக்கப்படுவதும் பஞ்சபூத தலங்களில் முதன்மையானதுமான தில்லை எனப்படும் சிதம்பரம் நடராஜர் கோயிலில்  மார்கழி ஆருத்ரா (திருவாதிரை) விழா கடந்த 1ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.  விழாவின் 9 வது நாளான இன்று  தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர்களை இழுத்தனர்.

வெள்ளிக்கிழமையான நாளை அதிகாலை மகாபிஷேகமும், பிற்பகல் 2 மணிக்கு மேல் ஆருத்ரா தரிசனமும் நடைபெறுகிறது. தேர்த்திருவிழாவை முன்னிட்டு சித்சபையில் உள்ள மூலவர்களான நடராஜமூர்த்தி, சிவகாமசுந்தரி அம்பாள் மற்றும் உற்சவர்கள் சுப்பிரமணியர், விநாயகர், சண்டிகேஸ்வரர் ஆகியோர் தனித்தனி தேர்களில் அதிகாலை எழுந்தருளினர்.

பின்னர் கீழவீதி தேரடி நிலையிலிருந்து 8 மணிக்கு தேர்கள் ஒவ்வொன்றாக புறப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர்களை இழுத்தனர். தேர்கள் கிழக்கு வீதி தொடங்கி, தெற்குவீதி, மேலவீதி, வடக்குவீதி வழியாக நிலையை அடைந்தன.

வெள்ளிக்கிழமை அதிகாலை சூரிய உதயத்திற்கு முன் ஆயிரங்கால் மண்டப முகப்பில் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகமும், புஷ்பாஞ்சலியும், ஸ்வர்ணாபிஷேகம் ஆகியவை நடைபெறுகிறது. பின்னர் ஆயிரங்கால் மண்டபத்தில் திருவாபரண அலங்காரமும், சித்சபையில் ரகசிய பூஜையும் நடைபெறுகிறது.

அதனையடுத்து பஞ்சமூர்த்திகள் வீதிஉலா வந்த பின்னர் பிற்பகல் 3 மணிக்கு மேல் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீநடராஜமூர்த்தியும், ஸ்ரீசிவகாமசுந்தரி அம்பாளும் புறப்பட்டு நடனப்பந்தலில் நடணமாடி ஆருத்ரா தரிசன காட்சியளித்து, சித்சபா பிரவேசம் செய்கின்றனர். ஜன.11-ம் தேதி முத்துப்பல்லக்கு வீதிஉலா காட்சியுடன் திரு விழா முடிவடைகிறது.

விழா ஏற்பாடுகளை உற்சவ ஏற்பாடுகளை பொதுதீட்சிதர்களின் செயலாளர் எஸ்.கே.பாலகணேச தீட்சிதர், துணைச்செயலாளர் சு.வை.நவமணி தீட்சிதர், உற்சவ ஆச்சாரியார் என்.சிதம்பர சபாபதி  தீட்சிதர் ஆகியோர் செய்திருந்தனர். சிதம்பரம் டிஎஸ்பி எஸ்.கார்த்திகேயன் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தேவேந்திரன் மற்றும்  போலீஸார்  பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *