சிறப்பு எஸ்.ஐ. வில்சன் சுட்டுக்கொலை: குற்றவாளிகளை கண்டுபிடிக்க 4 தனிப்படை அமைப்பு-முதல்வர்

சென்னை, ஜனவரி-09

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை சோதனை சாவடியில் பணியில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் (வயது 55) என்பவர் அங்கு வந்த மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடிவந்தனர். அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் வில்சன் கொலை தொடர்புடைய 2 சந்தேக நபர்களின் புகைப்படைங்களை வெளியிட்டு உள்ளனர். 

இந்த நிலையில், இச்சம்பவம் தொடர்பாக சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அறிந்த தெற்கு மண்டல காவல் துறை தலைவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட காவல் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், எனது உத்தரவின் பேரில் காவல் துறை தலைமை இயக்குநரும் சம்பவ இடத்திற்கு உடனடியாக சென்று விசாரணையை மேற்கொண்டு வருகிறார். சம்பவ இடத்தில் இரண்டு தோட்டாக்கள் மற்றும் இரண்டு காலி தோட்டாக்கள் ஆகியவற்றை காவல் துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

இவ்வழக்கில் எதிரிகளை அடையாளம் கண்டு கைது செய்ய, நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தனிப்படையினர், அப்பகுதியிலுள்ள கடைகள் மற்றும் வீடுகளில் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். வழக்கு புலன் விசாரணையில் இருந்து வருகிறது. குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடித்து, அவர்களுக்கு கடுமையான தண்டனை பெற்றுத் தர அரசு உறுதியான நடவடிக்கை எடுக்கும்.

மறைந்த வில்சனுக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மறைந்த காவல் உதவி ஆய்வாளர் வில்சனின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கப்படும். மேலும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு தகுதிக்கு ஏற்றாற்போல், கருணை அடிப்படையிலான அரசுப் பணி வழங்கப்படும்” இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *