பெண்ணை காப்பாற்றச் சென்று உயிரிழந்த யாகேஷ் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதி-முதல்வர் அறிவிப்பு

சென்னை, ஜனவரி-09

ஆட்டோ டிரைவரிடம் சிக்கிக்கொண்ட பெண்ணை காப்பாற்றுவதற்காக தன் உயிரை விட்ட திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு பகுதியை சேர்ந்த யாகேஷ் குடும்பத்திற்கு 10 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

கடந்த 25-ம் தேதி திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு பகுதியில் பணி முடிந்து பவானி என்ற பெண் ஆட்டோவில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். ஆட்டோ வழிமாறி சென்றதை உணர்ந்த பெண் தன்னை காற்றும்படி அலறியுள்ளார். இதனை அங்கு சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த இளைஞர்கள் கேட்டு ஆட்டோவை துரத்தி சென்று பெண்ணை காப்பாற்றியுள்ளனர்.

பெண்ணை காப்பாற்றியது மட்டுமில்லாமல், விடாமல் அந்த ஆட்டோவை இளைஞர்கள் துரத்தி செல்ல, அந்த ஆட்டோ டிரைவர் சினிமாவில் வருவது போல் இளைஞர்களின் இருசக்கர வாகனத்தை தட்டிவிட்டுள்ளார். இதில், படுகாயமடைந்த இளைஞர் யாகேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்ற இளைஞர்கள் எஸ்தர் பிரேம் குமார், பிரின்ஸ் பிராங்கிளின், வினித், துரைராஜ் ஆகியோர் சிறு காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், பெண்ணை காப்பாற்றுவதற்காக தன் உயிரை விட்ட யாகேஷ் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார். அதுமட்டுமில்லாமல், யாகேஷின் வீர தீர செயலை பாராட்டி, அவரது குடும்பத்திற்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து 10 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

காயங்களுடன் சிகிச்சை பெற்று வரும், பிரின்ஸ் பிராங்கிளினுக்கு 2 லட்சம் ரூபாயும், மற்ற இளைஞர்களுக்கு தலா 25 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி பேரவையில் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *