சிறப்பு எஸ்.ஐ. சுட்டுக்கொலை: சந்தேகிக்கும் நபர்களின் புகைப்படங்கள் வெளியீடு!!!

களியக்காவிளை, ஜனவரி-09

எஸ்.ஐ. கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையவர்களாக சந்தேகிக்கப்படும் நபர்களின் புகைப்படம் வெளியிடப்பட்டது.

தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு மணல் கடத்துவதை தடுப்பதற்காக குமரி மாவட்ட காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு கட்டமாக தமிழக-கேரள எல்லையில் சோதனை சாவடிகளும் அமைக்கப்பட்டு வாகனங்கள் கண்காணிக்கப்படுகிறது.

இதேபோல் களியக்காவிளை- மார்த்தாண்டம் சந்தைரோட்டில் மணல் கடத்தலை தடுப்பதற்காக தனி சோதனை சாவடி உள்ளது. இந்த சோதனை சாவடியில் தினமும் 2 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது வழக்கம்.

இந்தநிலையில் நேற்று இரவு இந்த சோதனை சாவடியில் களியக்காவிளை போலீஸ் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் (வயது 55) என்பவர் பணியில் இருந்துள்ளார். இரவு சுமார் 9.40 மணி அளவில் சோதனை சாவடி அருகே கார் வந்து நின்றது. அந்த காரில் இருந்து இறங்கிய மர்மநபர்கள், சோதனைசாவடிக்கு சென்று அங்கிருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சனுடன் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது.

பின்னர் திடீரென அவரை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இந்த திடீர் தாக்குதலை சற்றும் எதிர்பாராத வில்சனின் மார்பு, கழுத்து, வலது தொடை ஆகிய பகுதிகளில் குண்டு பாய்ந்தது. இதனால் ரத்த வெள்ளத்தில் அவர் சரிந்து விழுந்தார். வெறிச்செயலில் ஈடுபட்ட மர்மநபர்கள், தாங்கள் வந்த காரிலேயே தப்பி விட்டனர்.

துப்பாக்கி சத்தம் கேட்டு அந்த பகுதியில் இருந்தவர்கள் சோதனைசாவடி நோக்கி ஓடி வந்தனர். அங்கு குற்றுயிரும், குலையிருமாக உயிருக்கு போராடிய வில்சனை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து வில்சனை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடிவந்தனர். அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் வில்சன் கொலை தொடர்புடைய 2 சந்தேக நபர்களின் புகைப்படைங்களை வெளியிட்டு உள்ளனர். அவர்கள் கன்னியாகுமரியைச் சேர்ந்த   அப்துல் சமீம், தவ்பீக் ஆகியோர் ஆவர். அவர்களை பிடிக்கும் பணி யில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.

மார்த்தாண்டம் எஸ்.ஐ.வில்சன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பமாக கேரளாவை சேர்ந்த முகமது சமி, கவுசிக் ஆகியோருக்கு தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது. முகமது சமி, கவுசிக் ஆகியோர் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் உள்ளதாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *