சும்மா கிழி, கிழின்னு கிழிச்ச ரஜினி: தர்பார் விமர்சனம்

சென்னை, ஜனவரி-09

போலீஸ் கமிஷ்னராக இருக்கும் ஆதித்யா அருணாசலம் (ரஜினிகாந்த்) மும்பையில் தலைவிரித்தாடும் போதைப் பொருள் பிரச்சனையை தீர்க்க டெல்லியிலிருந்து அனுப்பி வைக்கப்படுகிறார். கமிஷனராக இருந்தாலும் சட்டப்படி மட்டுமே நடக்கும் ஆள் இல்லை இந்த ஆதித்யா. சட்டத்தை மீறுகிறீர்களே என்று கேட்கும் மனித உரிமை ஆணைய உறுப்பினர்களையே மிரட்டுகிறார் ஆதித்யா அருணாச்சலம்.

பெரிய தொழில் அதிபரின் மகனான போதைப் பொருள் சப்ளை செய்யும் அஜய் மல்ஹோத்ராவை (பிரதீக் பாபர்) பிடிக்கிறார் ஆதித்யா. அஜய் மல்ஹோத்ராவின் தந்தையான ஹரி சோப்ரா(சுனில் ஷெட்டி) ஆதித்யா அருணாசலத்தை பழிவாங்க வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பி, ஆதித்யா அருணாசலத்தின் மகளான வள்ளியை (நிவேதா தாமஸ்) குறிவைக்கிறார்.

முருகதாஸின் முந்தைய படங்களை போன்று இந்த படத்திலும் நீதி கிடைக்க ஹீரோ சட்டத்தை தன் கையில் எடுக்கிறார். ரஜினியின் எனர்ஜி, ஸ்டைலை பயன்படுத்தி ரசிக்கும்படியான ஆக்ஷன், டிராமா கலந்த கமர்ஷியல் படத்தை கொடுத்துள்ளார் முருகதாஸ்.

ரஜினி, நிவேதா தாமஸ் இடையே பாசக் காட்சிகள் படத்திற்கு பலம் சேர்க்கிறது. ஆதித்யா,  லில்லி(நயன்தாரா) இடையேயான காதல் காட்சிகள் ரசிக்கும்படி உள்ளது. நயன்தாராவுக்கு படத்தில் வேலையே இல்லை, பெயருக்கு இருக்கிறார்.

ஹரி சோப்ராவுக்கு பயங்கரமாக பில்ட்அப் கொடுத்தாலும் சொத்தையான வில்லனாக தெரிகிறார். வில்லன் என்பதால் பலரை கொலை செய்கிறார். ஆனாலும் ரசிகர்களை கவரவில்லை. அவருக்கும், ரஜினிக்கும் இடையேயான மோதல் காட்சி வலுவில்லாமல் உள்ளது. ஹீரோ ஜெயிக்க வேண்டும் என்பதற்காகவே வில்லனை சொத்தையாக வைத்தது போன்று உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *