மதிய உணவு-காமராஜர், சத்துணவு-எம்.ஜி.ஆர்., காலை உணவு-எடப்பாடியார்!!!

சென்னை, ஜனவரி-08

தமிழகம் முழுதும் அரசுப் பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விரைவில் அறிவிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

குழந்தைகள் பள்ளிக்கு செல்வதை அதிகரிக்க காமராஜர் மதிய உணவு திட்டத்தை அறிமுகப்படுத்தினார். காமராஜரின் மதிய உணவுத் திட்டத்தை மெருகூட்டும் விதமாக எம்ஜிஆர் அதை சத்துணவாக மாற்றினார். கலைஞர் மதிய உணவில் முட்டை சேர்க்க, ஜெயலலிதா மதிய உணவோடு வாழைப் பழம் சேர்க்க ஒவ்வொரு ஆட்சிக் காலத்திலும் கட்சி பேதமின்றி இந்தத் திட்டம் மேம்படுத்தப்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் முயற்சியில் கடந்த 2019 பிப்ரவரி 25 ஆம் தேதி முதல் உள்ளாட்சி அமைப்புகளுக்கு உட்பட்ட பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. சென்னை மாநகராட்சி பள்ளிகளில் இத்திட்டத்தை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் துவக்கி வைத்தார்.

மாநகராட்சிப் பள்ளிகளில் காலை உணவாக இட்லி, பொங்கல் உள்ளிட்ட உணவு வகைகள் வழங்கப்பட்டு வந்தன. இந்த காலை உணவு திட்டம் விரைவில் தமிழக முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் செயல்படுத்தப்பட இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த ஒரு வருடமாக தொண்டு நிறுவனங்களோடு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு மாநகராட்சிப் பள்ளிகளில் காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. கூலி வேலை பார்ப்பவர்கள் தங்களது குழந்தைகளுக்கு சீக்கிரம் உணவு சமைத்து கொடுக்க முடியாத சூழல் உள்ளது. மாணவ பருவத்தில் காலை உணவு மிக மிக இன்றியமையாதது.

இதை உணர்ந்துதான் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மூலம் காலை உணவு திட்டம் மாநகராட்சி பள்ளிகளில் தொடங்கப்பட்டது. இதுபோன்று தமிழகத்தின் பல பகுதிகளில் ஆங்காங்கே இருக்கும் தொண்டு நிறுவனங்கள் மாவட்ட கல்வி அலுவலர்களின் ஒருங்கிணைப்போடு சில அரசுப் பள்ளிகளில் காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது.

தொண்டு நிறுவனங்களோடு இணைந்து செயல்படும்போது அனைத்து அரசு பள்ளிகளுக்கும் உணவு வழங்கமுடியாத நிலை இருக்கிறது. எனவே இதை தமிழக அரசே கையிலெடுத்து செய்தால்தான் செம்மையாக முழுமையாக இருக்கும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி நீண்ட மாதங்களுக்கு முன்பே கோரிக்கை வைத்திருக்கிறார்.

பல்வேறு பிரச்சினைகளால் இந்த திட்டம் தள்ளிப்போய் கொண்டே இருந்த சூழலில் கடந்த சில நாட்களாக இது பற்றி முதலமைச்சர் பழனிசாமி ஆலோசித்து அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து, அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை, உணவுக்கான செலவு போன்றவை பற்றிய விவரங்கள் முழுமையாக ஆராயப்பட்டது.

இந்த நிலையில், அரசுப் பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விரைவில் அறிவிக்க உள்ளார் என தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதை உறுதி செய்யும் விதமாக இன்று (ஜனவரி 8) தனது ட்விட்டர் பதிவில், “சென்னை மாநகராட்சி பள்ளிகளில் சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு தொடங்கப்பட்டு வெற்றிகரமாக செயல்பட்டு வரும் மாணவ மாணவியருக்கு சத்துள்ள சிற்றுண்டி வழங்கும் ‘காலை உணவு திட்டத்தை’ தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளுக்கு விரிவுப்படுத்த தமிழக அரசு பரிசீலித்து வருவது மகிழ்ச்சியளிக்கிறது” என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி குறிப்பிட்டுள்ளார்

இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டால், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சிக்கு கிராம பகுதிகளில் பெரும் வரவேற்பு கிடைக்கும் என்பதில் எவ்வித ஐயமில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *