ஓய்வூதியதாரர்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டுத்திட்டம் 2022 ஆம் ஆண்டு வரை நீட்டிப்பு-ஒ.பி.எஸ்.

சென்னை, ஜனவரி-08

ஓய்வூதியதாரர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் இதுவரை எவ்வளவு பேர் பயனடைந்துள்ளனர் என்பது குறித்து, சட்டப்பேரவையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் அளித்துள்ளார்.

2020-ம் ஆண்டுக்கான சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று (ஜன.8) சட்டப்பேரவையில் கும்பகோணம் திமுக எம்எல்ஏ க.அன்பழகன் ஓய்வூதியதாரர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் குறித்து எழுப்பிய கேள்விக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அளித்த பதிலளித்து பேசினார்.

அவர் பேசியதாவது: ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கான புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் 2014 ஆம் ஆண்டு முதல், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் செயல்படுத்தப்பட்டது. முதலில் 01.07.2014-ல் அறிமுகப்படுத்தப்பட்டு, 30-06-2018 வரை அந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. அப்போது இரண்டு லட்சம் ரூபாய் அளவில், அரசுப் பணியில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற ஓய்வூதியதாரர்களுக்கு மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டன.

மீண்டும், இத்திட்டம் 01.07.2018 முதல் 30.06.2022 வரை நான்கு ஆண்டுகளை கொண்ட ஒரு தொகுப்பு கால அளவுக்கு சில சிறப்பு அம்சங்களுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது. இப்புதிய திட்டத்தில், அங்கீகரிக்கப்பட்ட மருத்துவச் சிகிச்சைகள் மற்றும் அறுவை சிகிச்சைகள் செய்து கொள்வதற்கு நான்கு லட்சம் ரூபாய் வரை மருத்துவ உதவி பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தை பொதுத்துறை நிறுவனமான யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனம் மற்றும் எம்.டி. இந்தியா என்ற தனியார் நிறுவனம் மூலம் செயல்படுத்தப்படுகிறது.

தற்போது இத்திட்டத்தின் கீழ் 7.30 லட்சம் அரசு ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் இணைந்துள்ளனர். இத்திட்டத்தில் காப்பீட்டு கட்டணமாக ரூ.350 அரசு ஓய்வூதியர் / குடும்ப ஓய்வூதியரின் ஓய்வூதியத்திலிருந்து மாதந்தோறும் பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 988 மருத்துவமனைகளில் பணமில்லா சிகிச்சை மேற்கொள்ள அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மட்டும் 969 மருத்துவமனைகளும், புதுச்சேரியில் 8 மருத்துவமனைகளும், திருவனந்தபுரத்தில் 3 மருத்துவமனைகளும், டெல்லியில் 5 மருத்துவமனைகளும், பெங்களூரூவில் 3 மருத்துவமனைகளும் அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

2019-2020 ஆம் ஆண்டுக்கான காப்பீட்டுக் கட்டணமாக ரூ.297.68 கோடி ரூபாய் யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்திற்கு செலுத்தப்பட்டுள்ளது. 01.07.2014 முதல் 30.06.2018 வரையிலான நான்காண்டு திட்ட செயல்பாட்டில் 2 லட்சத்து 1,285 பயனாளிகள் 578.01 கோடி ரூபாய் அளவுக்கு மருத்துவ சிகிச்சை பெற்றுள்ளனர்.

தற்போது ஓய்வூதியதாரர்களுக்கான புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் 2018-ன் கீழ் 01.07.2018 முதல் 31.12.2019 வரை 94 ஆயிரத்து 981 பயனாளிகள் 331.36 கோடி ரூபாய் அளவுக்கு மருத்துவச் சிகிச்சை பெற்றுப் பயனடைந்துள்ளனர். 01-07-2014 முதல் 31-12-2019 வரை 2 லட்சத்து 96 ஆயிரத்து 266 பயனாளிகள் 909.37 கோடி ரூபாய் அளவுக்கு மருத்துவச் சிகிச்சை பெற்றுப் பயனடைந்துள்ளனர்.

இப்புதிய திட்டத்தில், கீழ்க்காணும் மருத்துவச் சிகிச்சைகள் மற்றும் அறுவை சிகிச்சைகள் ஆகியவற்றைப் பெற உச்சவரம்பு 7.50 லட்சம் ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சை, கீமோதெரபி, கதிரியக்க சிகிச்சை மற்றும் புற்றுநோய் கட்டிகளுக்கான நோய் தடுப்பாற்றல் சிகிச்சை முறைகள் மூலம் மருத்துவச் சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.

கல்லீரல், சிறுநீரகம், இதயம், நுரையீரல் மற்றும் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சையும், சிக்கலான இதய அறுவை சிகிச்சை மற்றும் இதயமாற்று அறுவை சிகிச்சையும், விபத்து மற்றும் தீவிர சிகிச்சை தேவைப்படும் பல்வகைப்பட்ட எலும்பு முறிவு மற்றும் இதய வால்வு மாற்று அறுவை சிகிச்சை, அன்யூரிசிம்ஸ் மற்றும் ஆஞ்சியோபிளாஸ்டி, தீயினால் ஏற்பட்ட காயங்களுக்கான சிகிச்சையும், இத்திட்டத்தில் கண்புரை அறுவை சிகிச்சைக்கான மருத்துவ உதவியின் உச்சவரம்பு, ஒரு கண்ணிற்கு 20 ஆயிரம் ரூபாயாகவும், கர்ப்பப்பை நீக்குவதற்கான அறுவை சிகிச்சை உதவியின் உச்சவரம்பு 45 ஆயிரம் ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இப்புதிய திட்டத்தில், திடீரென்று எதிர்பாராதவிதமாக, உடனடி கவனிப்பு தேவைப்படுகின்ற மற்றும் விபத்தைத் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சைகள் மற்றும் அறுவை சிகிச்சைகளுக்கு அங்கீகரிக்கப்படாத மருத்துவமனைகளில் சிகிச்சை மேற்கொண்டபின் மாவட்ட அளவிலான அதிகாரக்குழு மூலம் நடைமுறையில் உள்ள விதிகளின் படி அவர்களுக்கு மருத்துவச் செலவினத் தொகையினை மீளப்பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ், 114 வகையான சிகிச்சைகள் மற்றும் அறுவை சிகிச்சை நடைமுறைகள் பணமில்லா சிகிச்சையாக மேற்கொள்வதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது என்பதையும், இப்புதிய திட்டத்தில், ஓய்வூதியதாரர்களைச் சார்ந்துள்ள மகன் / திருமணமாகாத மகள் வாழ்க்கை நடத்த இயலாத அளவுக்கு மனநலம் குன்றியவராக அல்லது மனநலமற்றவராக இருந்தாலோ, மாற்றுத்திறனாளியாக இருந்து மற்றும் பொருளீட்ட இயலாதவராக இருந்தாலோ, மணமாகாத / விவாகரத்து பெற்ற / கணவரை இழந்த மகள்கள் ஆகியோர் இப்பயனைப் பெற, சில நிபந்தனைகளுக்குட்பட்டு நீட்டிக்கப்பட்டுள்ளது”. இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *