மீண்டும் திகார் சிறைக்கு அனுப்பப்பட்டார், ப.சிதம்பரம்

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில், முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் நீதிமன்றக் காவல் மேலும் 14 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

டெல்லி, செப்-19

கடந்த 2007ஆம் ஆண்டில் ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம், 305 கோடி ரூபாய் அந்நிய முதலீட்டைப் பெற்றதில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. அந்நிய முதலீட்டைப் பெறுவதற்கான அனுமதியைப் பெற்றுக் கொடுக்க அப்போது நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரமும், அவரது மகன் கார்த்தி சிதம்பரமும் உதவியதாக புகார் கூறப்பட்டது. அனுமதிக்கப்பட்டதை விட அதிக முதலீட்டைப் பெற்றுக் கொடுக்க உதவியதற்காக கார்த்தி சிதம்பரத்துக்கு, ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் லஞ்சம் கொடுத்ததாக சிபிஐயும், அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்தன. இந்த வழக்கில், கடந்த மாதம் 21ஆம் தேதி இரவில், ப.சிதம்பரத்தை சிபிஐ கைது செய்தது.

அவரைக் காவலில் எடுத்து விசாரித்த சிபிஐ அதிகாரிகள் விசாரணை முடிந்து, செப்டம்பர் 5ஆம் தேதி அன்று டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது சிதம்பரத்தை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் திகார் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். திகார் சிறையில் அடைக்கப்பட்ட ப.சிதபரத்தின் காவல், இன்றுடன் நிறைவடைந்த நிலையில், மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.

அப்போது அவரது நீதிமன்றக் காவலை மேலும் 14 நாட்களுக்கு நீட்டிக்குமாறு நீதிபதி அஜய் குமார் குஹாரிடம் சிபிஐ கோரிக்கை வைத்தது. அதற்கு, சிதம்பரத்தின் வழக்கறிஞரான கபில் சிபல் எதிர்ப்பு தெரிவித்தார்.

சிதம்பரத்துக்கு பல்வேறு உடல்நலக் குறைபாடுகள் இருப்பதையும் அவர் சுட்டிக் காட்டினார். இருப்பினும் கபில் சிபலின் வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி, சிதம்பரத்தின் நீதிமன்றக் காவலை அடுத்த மாதம் 3ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார். இதன் காரணமாக, ப.சிதம்பரம் மீண்டும் திகார் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *