நாடு முழுவதும் வேலைநிறுத்தம்: வங்கி மற்றும் பொது நிறுவனங்களின் பணிகள் முடக்கம்

ஜனவரி-08

நாடுமுழுவதும் 10 தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ள வேலைநிறுத்தப் போராட்டம் பல்வேறு மாநிலங்களிலும் நடந்து வருகிறது. வங்கிகள் உட்பட பல்வேறு துறை சார்ந்த பணிகள் முடங்கியுள்ளன

12 அம்ச பொது கோரிக்கைகளை வலியுறுத்தி, 10 மத்திய தொழிற்சங்கங்கள் இன்று நாடுதழுவிய வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன. தொழிலாளர் துறை சீர்திருத்தங்கள், அன்னிய நேரடி முதலீடு, தனியார் மயமாக்கல் உள்ளிட்ட மத்திய அரசு கொள்கைகளை எதிர்த்து இந்த வேலைநிறுத்தம் நடக்கிறது.

அதுபோலவே அரசுத்துறை நிறுவனங்களில் பங்குகளை விற்பனை செய்வது உள்ளிட்ட கோரிக்கைகளையும் தொழிற்சங்கங்கள் முன் வைத்துள்ளன. குடியுரிமைச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு உள்ளிட்டவற்றை கைவிட வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தியும் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

இந்த போராட்டத்தில் பல்வேறு அரசுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள், வங்கித்துறை பணியாளர்கள், பொதுத்துறையில் பணியாற்றும் தொழிலாளர்கள் என பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்த வேலை நிறுத்தத்தில் ஐஎன்டியுசி, ஏஐடியுசி, ஹெச்எம்எஸ், சிஐடியு, ஏஐயுடியுசி, டியுசிசி, எஸ்இடபிள்யுஏ, ஏஐசிசிடியு, எல்பிஎப், யுடியுசி உள்ளிட்ட அமைப்புகளும் பங்கேற்றுள்ளன. அதேசமயம் ஆர்எஸ்எஸ் ஆதரவு தொழிற்சங்கமான பிஎம்எஸ் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்கவில்லை.

கேரளா, மேற்குவங்கம் உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தால் வங்கி உட்பட பல்வேறு துறை சார்ந்த பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. சில பகுதிகளிலும் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. ரயில் மறியல் போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேசமயம் தமிழகம் உட்பட சில மாநிலங்களில் தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தத்தால் பெரிய பாதிப்பு ஏதுமில்லை. இந்த வேலை நிறுத்தத்தில் 25 கோடிக்கும் அதிகமானோர் பங்கேற்றுள்ளதாக தொழிற்சங்கங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *